ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்றும் 4 அப்பல்லோ மருத்துவர்கள் ஆஜர்

 
Arumugasamy

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் இன்றும் 4 அப்பல்லோ மருத்துவர்கள் மறு விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர். 

கடந்த 2017 ஆம் ஆண்டு  முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதாவின் மரணம்  தொடர்பாக விசாரணை நடத்த  ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில்  விசாரணை ஆணையம் தமிழக அரசால் அமைக்கப்பட்டது. இந்த ஆணையத்தில், ஜெயலலிதாவின் உறவினர்கள், பாதுகாவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என சுமார் 150 க்கும் மேற்பட்டோர் ஆஜராகி வாக்குமூலங்களை அளித்துள்ளனர்.  அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு  தொடரப்பட்டதை அடுத்து,  2 ஆண்டுகள்  ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை தடைபட்டது. இதனையடுத்து 2 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் 7 ஆம் தேதி மீண்டும் விசாரணையை தொடங்கிய ஆணையம் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியது. 

apollo chennai

இந்நிலையில், அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் அப்பல்லோ மருத்துவர்களிடம் நேற்று மறு விசாரணை மேற்கொண்டனர். அப்பல்லோ மருத்துவர்கள் கிரிநாத், விஜயசந்திர ரெட்டி, பாபு ஆபிரகாம் மற்றும் ஸ்டான்லி மருத்துவர் நந்தகுமார் ஆகியோர் ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலங்களை அளித்தனர். ஜெயலலிதாவை சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்லாததற்கு என்ன காரணம் என்பதையும் அவர்கள் கூறினர். இந்நிலையில், இன்றும் 4 அப்பல்லோ மருத்துவர்கள் மறு விசாரணைக்காக ஆஜராகியுள்ளனர். அப்பல்லோ மருத்துவர்கள் ரமேஷ் வெங்கட்ராமன், டொமினிக் சவியோ, ஶ்ரீதர், ராமசுப்பிரமணியன் ஆகியோர் ஆஜராகியுள்ளனர். மருத்துவர்களிடம் அப்பல்லோ தரப்பு வழக்கறிஞர்கள் மறு விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.