துபாயில் நிகழ்ந்த கார் விபத்தில் கேரளாவைச் சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி..!
லிவா எனப்படும் வருடாந்திர திருவிழாவில் பங்கேற்று விட்டு, நேற்று (ஜனவரி 4) அதிகாலை துபாயில் உள்ள வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கியது. விசாரணையில் பாதிக்கப்பட்டவர்கள் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் லத்தீப் - ருக்ஷானா தம்பதி மற்றும் அவர்களின் 5 குழந்தைகள் என தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் அஷாப்,14, அமார், 12, அயாஷ்,5, ஆகிய மூன்று குழந்தைகளும், குடும்ப உதவியாளர் புஷ்ரா என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்துல் லத்தீப், ருக்ஷானா மற்றும் அவர்களின் மற்ற இரு குழந்தைகளான எஸ்ஸா,10, அஸ்ஸாம்,7, ஆகிய நால்வர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒரு குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
சிறப்பு அனுமதி பெற்று, உயிரிழந்தவர்களின் உடல்களை ஐக்கிய அரபு அமீரகத்திலேயே அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.


