சென்னை மெட்ரோவில் நேற்று ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம்..!
சென்னை மெட்ரோவில் ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்திய விமானப்படையின் 92 ஆவது ஆண்டு விழாவையொட்டி விமான சாக நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. சென்னை மெரினாவில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 15 லட்சம் மக்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிகளவிலான மக்கள் கூட்டத்தால் சென்னையே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக காமராஜர் சாலை, அண்ணா சாலை, சந்தோம் சாலை, LB சாலை, ஈவேரா சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை , வாலாஜா சாலை ஆகிய முக்கிய சாலைகளில் மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனால் சென்னையின் பிரதான சாலைகளான பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் சாலை, சர்தார் வல்லபாய் படேல் சாலை, அண்ணா சாலை, ராஜாஜி சாலைகளில் இரவு வரை போக்குவரத்து நெரிசல் நீடித்தது.
அதேபோல் கடற்கரை நோக்கி செல்லும் ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. வேளச்சேரி ரயில் நிலையத்தில் நிற்கக்கூட இடம் இல்லாமல் மக்கள் அலைமோதியதும், முன்டியடித்துக் கொண்டு மின்சார ரயில்களின் மேற்கூரைகளின் ஏறியதும் காணமுடிந்தது. அதேபோல் நேற்றைய தினம் மெட்ரோ ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில்களில் நேற்று ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வழக்கமாக 7 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும் நிலையில், நேற்றைய தினம் 3.5 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டதால் கூட்டத்தை சமாளிக்க முடிந்ததாக கூறுகின்றனர். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 1.70 லட்சம் பேர் மெட்ரோவில் பயணம் மேற்கொள்வார்கள். ஆனால் நேற்று ஒரே நாளில் 4 லட்சம் பேர் பயணம் செய்திருக்கிறனர். இதற்கு முன்பாக கடந்த செப். 6ம் தேதி ஒரே நாளில் 3,74,087 பேர் சென்னை மெட்ரோவில் பயணம் செய்ததே அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.