கார் மீது லாரி மோதி விபத்து.. ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி..

 
கார் மீது லாரி மோதி விபத்து.. ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி..

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே இன்று அதிகாலை  ஏற்பட்ட விபத்தில் காரில் சென்ற ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

மயிலாடுதுறை சீர்காழியில் நிதி நிறுவனம் நடத்தி வந்தவர் முனியப்பன்( 48).  கரூரை பூர்வீகமாகக் கொண்ட இவர், தனது மனைவி கலைவாணி( 40) , தாயார் பழனியம்மாள் , மகள்  ஹரிணி( 13) , மகன் கார் முகிலன் ( 5 ) ஆகியோருடன் காரில் சொந்த ஊருக்குச் சென்றுள்ளார். பின்னர் நேற்றிரவு மீண்டும் காரில் சீர்காழிக்கு திரும்பியுள்ளார்.

கார் மீது லாரி மோதி விபத்து.. ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி..

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமானோர் சொந்த ஊர் திரும்பியதால் திருச்சி-சென்னை  தேசிய நெடுஞ்சாலையில்  திருமாந்துறை சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் சுங்கச்சாவடியில்  வாகனங்கள்  சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு  சாலையின் இருபக்கங்களிலும் அணிவகுத்து நின்றன. இதில் முனியப்பனும்  இன்று அதிகாலை 4 மணி அளவில் மாட்டிக்கொண்டார்.

இறப்பு

இதனையடுத்து தூத்துக்குடியில் இருந்து சுண்ணாம்பு பாரம் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று  காரின் பின்பக்கம்  வேகமாக மோதியது. இதில்  கட்டுப்பாட்டை இழந்த கார்  முன்னால் நின்றுகொண்டிருந்த மற்றொரு லாரி மீது  மோதி அதன் அடியில் சிக்கிக்கொண்டது.  இதில்  கார் அப்பளம் போல் நொறுங்கியது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்த  முனியப்பன், கலைவாணி, பழையம்மாள், ஹரினி ஆகிய  4 பேரும்  நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.  அதேநேரம் சிறுவன் கார்முகிலன் மட்டும் நல்வாய்ப்பாக காயங்களுடன் உயிர் தப்பினான்.

இந்த விபத்து குறித்து தகலறிந்த மங்களமேடு போலீஸார்சம்பவ இடத்திற்கு வந்து சிறுவனை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.