கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரம் - 4 பேர் விசாரணைக்கு ஆஜர்!

 
amudha ias

அம்பாசமுத்திரத்தில் கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் விசாரணை அதிகாரி அமுதா ஐ.ஏ.எஸ் முன்பு 4 பேர் விசாரணைக்கு ஆஜராகியுள்ளனர்.

திருநெல்வேலியில் குற்ற வழக்குகளில் சிக்கிய விசாரணைக் கைதிகளின் பற்களை  பிடுங்கிய  விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்து வந்த  பல்வீர் சிங், சிறிய குற்றங்களுக்காக காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட 10க்கும் மேற்பட்டோரின்  பற்களை பிடுங்கி நூதன தண்டனை அளித்து வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  இதைத்தொடர்ந்து, விசாரணைக் கைதிகளின் பற்களை பிடுங்கி தண்டனை அளித்த  ஏஎஸ்பி பல்வீர் சிங், கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. அதன்பேரில், ஏஎஸ்பி பல்வீர் சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு  மாற்றப்பட்டார்.  இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மை செயலாளர்  அமுதா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார்.
 
இதனை தொடர்ந்து அவர் தனது முதல்கட்ட விசாரணையை  கடந்த 10ம் தேதி தொடங்கினார். ஆனால் அன்றைய தினம் யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரி அமுதா தனது 2-வது கட்ட விசாரணையை தொடங்கினார். இன்றும் நாளையும் விசாரணை நடக்கிறது. முதல் நாளான இன்று விசாரணைக்கு 4 பேர் ஆஜர் ஆகியுள்ளனர்.அவர்களிடம் விசாரணை கைதிகளின் பிடுங்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.