#BREAKING டிட்வா புயல் எதிரொலி- நாளை 47 விமானங்கள் ரத்து
டிட்வா புயல், கனமழை மிரட்டல் காரணமாக, சென்னை விமான நிலையத்தில், இரண்டாவது நாளாக, நாளை ஞாயிற்றுக்கிழமை, 47 விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றனர்.

டிட்வா புயல், கனமழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இருந்து, தமிழ்நாட்டின் மதுரை திருச்சி தூத்துக்குடி சேலம் மற்றும் ஹைதராபாத் பெங்களூர் இலங்கையின் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்லும் 27 புறப்பாடு விமானங்களும், அதைப்போல் 27 வருகை விமானங்களும், மொத்தம் 54 விமானங்கள் இன்று அதிகாலையில் இருந்து நள்ளிரவு வரையில் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் புயல் இன்னும் கரையைக் கடக்காமல், நாளை ஞாயிறு காலை கரையைக் கடக்க கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதை அடுத்து நாளை ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாக சென்னை விமான நிலையத்தில் 36 உள்நாட்டு விமானங்கள்,11 சர்வதேச விமானங்கள், மொத்தம் 47 விமானங்கள் ரத்து என்று, சென்னை விமான நிலைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
அதன்படி நாளை ஞாயிறு காலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரையில் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சேலம் ஆகிய இடங்களுக்கு செல்லும் 18 புறப்பாடு விமானங்களும், நாளை காலை 8 40 மணியிலிருந்து, இரவு 11:30 மணி வரையில், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய இடங்களில் இருந்து சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு வரும் 18 விமானங்களும் ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, நாளை ஞாயிறு காலை ஒன்பது 45 மணியிலிருந்து, இரவு ஒன்பது மணி வரையில், இலங்கையின் தலைநகர் கொழும்பு செல்லும் ஐந்து விமானங்கள், யாழ்ப்பாணம் செல்லும் 1 விமானம், ஆகிய ஆறு புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதைப்போல் நாளை காலை 8 40 மணியிலிருந்து இரவு 8 மணி வரையில், இலங்கையின் கொழும்பு நகரில் இருந்து, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் 4 விமானங்களும், யாழ்ப்பாணத்திலிருந்து சென்னை வரும் 1 ஒரு விமானமும், மொத்தம் 5 வருகை விமானங்கள் நாளை ரத்து என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து டிட்வா புயல் கனமழை காரணமாக சென்னை விமான நிலையத்தில், நாளை ஒரே நாளில்,24 புறப்பாடு விமானங்கள்,23 வருகை விமானங்கள், மொத்தம் 47 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புயல் காற்று வேகம் மற்றும் மழையின் தாக்கம் அதிகரிக்குமே ஆனால், மேலும் சில விமானங்கள் ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. எனவே நாளை பயணிக்கும் விமான பயணிகள் அனைவரும், தங்கள் பயணிக்க வேண்டிய விமான நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டு, தங்கள் விமானங்கள் புறப்படும் நேரங்கள் வரும் நேரங்கள் போன்றவைகளை கேட்டு தெரிந்து அறிந்து கொண்டு அதற்கு தகுந்தார் போல் பயணிகள் தங்கள் பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.


