471 புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்: கொடியசைத்து துவக்கி வைத்தார் முதல்வர்

 

471 புதிய பேருந்துகள் சேவை தொடக்கம்: கொடியசைத்து துவக்கி வைத்தார் முதல்வர்

போக்குவரத்து துறை சார்பில் நவீன வசதிகள் கொண்ட 471 புதிய பேருந்துகள் சேவையை முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

சென்னை: போக்குவரத்து துறை சார்பில் நவீன வசதிகள் கொண்ட 471 புதிய பேருந்துகள் சேவையை முதல்வர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

போக்குவரத்தை நவீனமயமாக்கும் முயற்சிகளை அரசு மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் படுக்கை வசதி, ஏ.சி. வசதி, கழிவறை  போன்ற வசதிகள் கொண்ட பேருந்துகளை அரசு அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், போக்குவரத்து துறை சார்பில் 126 கோடி 79 லட்சம் ரூபாய்  செலவில் 471 புதிய பேருந்துகளின் சேவையை சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் பழனிசாமி இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

புதிய பேருந்துகளில் படுக்கை வசதி, கழிவறை, குளிர்சாதன வசதி உள்ளது. விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அமைச்சர்கள் ஜெயக்குமார், காமராஜ், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். பேருந்தை துவக்கி வைத்த முதல்வர் பேருந்தின் உள்ளே சென்று பார்வையிட்டார்.

 இந்த பேருந்துகளில், வேகக்கட்டுப்பாட்டுக் கருவி, ஜி.பி.எஸ். வசதி, செல்போன் செயலி மூலம் பஸ் வரும் நேரத்தை அறியும் வசதி, 2 அவசர கால வழிகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

அதேபோல், சென்னை மாதவரத்தில் ரூ.95 கோடியில் கட்டப்பட்ட புதிய அடுக்குமாடி பேருந்து நிலையத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் பழனிசாமி திறந்து வைத்தார். இங்கு, ஒரே நேரத்தில் 42 பேருந்துகள் இயங்கும் வண்ணமும், 48 பேருந்துகளை நிறுத்தி வைக்கவும் மேல் தளத்தில் வசதிகள் உள்ளது.

மேலும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் அறிவித்த படி, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டது. அத்துடன், கோயம்பேட்டில் ரூ.21.75 கோடி மதிப்பிலான தானிய கிடங்கு மற்றும் வணிக வளாக கட்டடத்தையும் காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.