கனியாமூர் பள்ளி நிர்வாகிகள் 5 பேரும் ஜாமீனில் விடுதலை..

 
கனியாமூர் பள்ளி நிர்வாகிகள் 5 பேரும் ஜாமீனில் விடுதலை..


கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியின் தாளாளர்,  முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் ஆகிய 5 பேரும் இன்று   ஜாமினில் வெளியே வந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13 ஆம் தேதி உயிரிழந்தார். அவரது இறப்பில் மர்மம் இருப்பதாக  பெற்றோர் குற்றம் சாட்டிய நிலையில் பள்ளி நிர்வாகிகள்   தாளாளர், முதல்வர், 2 ஆசிரியர்கள் உள்ளிட்ட 5 பேரை சின்னசேலம் காவல்துறையினர் கைது செய்தனர்.  அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.  இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில்   ஐந்து பேரும் ஜாமீன் கோரி  விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  இந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  

 கள்ளக்குறிச்சி மாணவி இறப்புக்கு அண்ணாமலை ஏன் நீதிகேட்கவில்லை ?  - கே. பாலகிருஷ்ணன்..

இதனையடுத்து  5 பேரும்  மீண்டும்  ஜாமீன் வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.  தங்கள் மீதான குற்றச்சாட்டில் எந்தவித அடிப்படை ஆதாரங்களும் இல்லை என்றும், ஆகையால்   தங்களுக்கு ஜாமீன் வழங்கிட வேண்டும் என்றும் அவர்கள்  மனுவில்  குறிப்பிட்டிருந்தனர்.   அதன்படி   பள்ளி 5  பேருக்கும் கடந்த 26 ஆம் தேதி சென்னை  ஹைகோர்ட்  ஜாமீன்  வழங்கி உத்தரவிட்டது.  இந்நிலையில்  கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த வழக்கில்  கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பள்ளி  செயலாளர் சாந்தி,  வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 3 பேரும் தனிக்கிளை சிறையில் இருந்தும், பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், சிவசங்கரன் ஆகிய   இருவரும் சேலம் மத்திய சிறையில் இருந்தும் இன்று வெளியில் வந்தனர்.  

கள்ளக்குறிச்சி மாணவி இறப்பு : பள்ளி நிர்வாகிகள் 5 பேரை ஒருநாள் காவலில் விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி..

முன்னதாக  இந்த வழக்கில் மாணவியின் இரண்டு பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் ஆய்வு செய்த போது ஜிப்மர் மருத்துவ குழு  நீதிமன்றத்தில்  அறிக்கை  தாக்கல் செய்திருந்தது. அந்த மருத்துவ குழு அறிக்கையின் படி,  மாணவி ஸ்ரீமதியின் முதல் உடற்கூறாய்வுக்கும்,  இரண்டாவது உடற்கூராய்விற்கும்   பெரிய அளவிலான வித்தியாசங்கள் இல்லை என்றும், மாணவி பாலியல் பலாத்காரமோ கொலையோ செய்யப்படவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.