சிக்கன் ரோல் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு உடல்நலக் குறைவு- கடைக்கு சீல்

 
சிக்கன்

புதுக்கோட்டை கீழ நான்காம் வீதியில் உள்ள சவர்மா கடையில் சிக்கன் ரோல் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு வயது சிறுவன் உட்பட ஐந்து பேருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் பிரவீன் குமார் சம்பந்தப்பட்ட சவர்மா கடையில் அதிரடியாக சோதனை நடத்தியதில் கெட்டுப்போன சிக்கன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

புதுக்கோட்டை கீழ நான்காம் வீதியில் பெரியார் நகரை சேர்ந்த யூசுப் என்பவர் நான்கு ஆண்டுகளாக சவர்மா கார்னர் என்ற பெயரில் சவர்மா கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் அந்த கடையில் நேற்று இரவு சிக்கன் ரோல் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அப்துல் ஹக்கீம்(49) அவரது மனைவி சர்மிளா பானு (40) இவரது மகன்கள்  அப்துல் ரகுமான் (7), முகமது அஸ்லாம் (15), மகள் சுமையா ரிஸ்வானா (18) ஆகிய 5 பேருக்கு வாந்தி வயிற்றுவலி வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் ஐந்து பேரும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். 

இதனை அடுத்து சம்பந்தப்பட்ட சவர்மா கடையில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பிரவீன் குமார் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரை அந்த கடைக்கு வரவழைத்து காவல்துறையினரின் பாதுகாப்போடு சோதனை மேற்கொண்டதில் அந்த கடையில் கெட்டுப்போன 5 கிலோ சிக்கன் இருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர் பிரவீன் குமார் அந்த சிக்கனை பினாயில் ஊற்றி அளித்துவிட்டு உடனடியாக அந்த கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை மேற்கொண்டார்.

மேலும் சவர்மாவுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தடை விதித்து வாய்மொழி உத்தரவு வழங்கியிருப்பதாகவும் அதனை மீறி சவர்மா செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சவர்மா கடை நடத்த வேண்டும் என்றால் அதற்கென்று உரிய முறையில் உணவு தயாரிக்க தெரிந்தவர் தான் அதனை செய்ய வேண்டும் என்றும் அவ்வாறு செய்ய தெரிந்தாலும் உரிய அனுமதி பெற்ற பின்னர் தான் அந்த கடையை நடத்த வேண்டும் என்றும் தற்போது பாதிக்கப்பட்டவர்கள் சிக்கன் ரோல் சாப்பிட்டதால் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதும் அவர்கள் சாப்பிட்ட உணவால் பாதிப்பு என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் ஆய்வுக்கு பின்னர் தான் அது தெரியவரும் என்றும் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பிரவீன் குமார் தெரிவித்தார்.