திருவண்ணாமலை மகா தீபத்திற்காக 50,000 லட்டுகள் தயார்!
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை டிசம்பர் 3 ஆம் தேதி அதிகாலை திருக்கோவில் கருவறையில் முன்பு 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை திருக்கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. தீபத்தினை காண்பதற்கு லட்சகணக்கானோர் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். தீபத்தை காண்பதினால் மோட்சம் கிட்டும் என்று பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
திருவண்ணாமலையில் நடைபெறும் பரணி தீபத்தின் போது கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு ஆண்டு தோறும் விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகேயுள்ள குமாரகுப்பம் கிராமத்தை சார்ந்த கிராம மக்கள் லட்டுவை செய்து பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்நிலையில் 22 வது ஆண்டாக 50 ஆயிரம் லட்டு பக்தர்களுக்கு வழங்க வழங்க கிராம மக்கள் லட்டு பிரசாதத்தினை தயார் செய்துள்ளனர். லட்டு பிரசாதம் செய்து கிரிவலப்பாதையில் வருபவர்களுக்கு கொடுப்பதன் மூலம் குடும்பத்தில் நன்மை கிடைப்பதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பக்தர்களின் வசதிக்காக நகரங்களை இணைக்கக்கூடிய 9 சாலைகளிலும், 24 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு வருவதோடு, அனைத்து தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் துரிதமாக செய்து வருகின்றது. சுமார் 130 இடங்களில் கார் பார்க்கிங் வசதிகளும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


