5வது மெகா தடுப்பூசி முகாம் - முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!!

 
vaccine

தமிழகத்தில் இன்று 5வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி காலை முதல் நடைபெற்று வருகிறது. இதற்கான தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையை பொருத்தவரை 1600 முகங்கள் செயல்பட்டு வருகிறது.

vaccination camp

கொரோனா தமிழகத்தில் கட்டுக்குள் வந்து கொண்டிருக்கும் நிலையில் மேலும் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக சுகாதாரத் துறை சார்பாக கடந்த நான்கு வாரங்களாக மெகா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்று வருகிறது.  அந்த வகையில் இன்று ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.  ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் ,அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் என 30 ஆயிரம் இடங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசி முகாமில் இரண்டாவது டோஸ் செலுத்துபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று நடைபெற்று வரும்  5வது மெகா தடுப்பூசி முகாமிற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் , மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் ஆகியோர் உடனிருந்தனர்.

vaccine

இதனிடையே  செப்டம்பர் 12ஆம் தேதி நடத்தப்பட்ட தடுப்பூசி முகாமில் ஒட்டுமொத்தமாக 28 லட்சத்து 93 ஆயிரத்து 21 பேருக்கும், 19ஆம் தேதி நடத்தப்பட்ட முகாமில் 16 லட்சத்து 43 ஆயிரத்து 879 பேருக்கும்,  செப்டம்பர் 26ஆம் தேதி 24 லட்சத்து 93 ஆயிரத்து 101 பேருக்கும் , அக்டோபர் 3ஆம் தேதி 17 லட்சத்து 19 ஆயிரத்து 544 பேருக்கும்  தடுப்பூசி  செலுத்தப்பட்டது. இந்த நான்கு தடுப்பூசி சிறப்பு முகாம்கள் மூலம் 87 லட்சத்து 47 ஆயிரத்து 545 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.