சீறிப் பாய்ந்த கார்...கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து...கல்லூரி மாணவர்கள் 6 பேர் பலி
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் அருகே அதிவேகமாக சென்ற கார் கண்டெய்னர் லாரியின் பின்பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள் உட்பட 6 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
டேராடூன் அருகே இன்னோவா கார் ஒன்று அதிவேகமாக சென்றுகொண்டிருந்தது. அதில் 3 பெண்கள் உட்பட 6 கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். இந்த கார் சுமார் 100 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றதாக கூறப்படும் நிலையில், எதிர்பாராதவிதமாக கண்டெய்னர் லாரியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த கார் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், அதில் பயணித்தவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் 3 பெண்கள் உட்பட 6 கல்லூரி மாணவர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
அதாவது குணீத் சிங் (19), காமக்ஷி சிங்கால் (20), நவ்யா கோயல் (23), ரிஷப் ஜெயின் (24), அதுல் அகர்வால் (24) குணால் குக்ரேஜா (23) ஆகிய 6 பேர் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த 6 பேரில் 5 பேர் டேராடூனையும், ஒருவர் சம்பாவையும் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. விபத்தில் உயிரிழந்த 6 பேரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.