ஈரோடு குதிரை சந்தையில் 6 குதிரைகள் மர்ம மரணம்
தென்னிந்தியாவின் புகழ் பெற்ற அந்தியூர் குதிரை சந்தைக்கு கொண்டுவரப்பட்ட ஆறு நாட்டின குதிரைகள் மர்மமான வகையில் உயிரிழந்தன.

ஈரோடு மாவட்டம் அந்தியூர், புதுப்பாளையத்தில் , மிகவும் பிரசித்தி பெற்ற குருநாதசாமி கோவில் ஆடிப்பெரும் தேர்த்திருவிழா வரும் 13-ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி நடைபெறுகின்ற குதிரை மற்றும் கால்நடை சந்தை தென்னிந்திய அளவில் புகழ்பெற்றது. வடமாநிலத்தில் குதிரை சந்தைக்கு புகழ்பெற்றது புஷ்கர் குதிரை சந்தை, அதேபோல் தென்னிந்தியாவில் அந்தியூர் குதிரைச் சந்தை மிகவும் பிரசித்தி பெற்றது. சுமார் பத்து ஆயிரம் முதல் ஒரு கோடி ரூபாய் வரையிலான நாட்டினம் மற்றும் உயரக குதிரைகள் கொண்டு வரப்படும்.

இந்த நிலையில் குதிரை சந்தைக்கு கர்நாடக மாநிலம், மைசூர் பகுதியைச் சேர்ந்த ஜபியுல்லாகான் மற்றும் அவரது தம்பி சஜாத் ஆகியோர் 24 நாட்டின குதிரைகளை நேற்று கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை ஐந்து பெண் குதிரைகள் மற்றும் ஒரு ஆண் குதிரை என ஆறு குதிரைகள் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளன. தொடர்ந்து இது குறித்து கால்நடைத்துறை மற்றும் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குதிரை உயிரிழப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என கால்நடைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


