4 நாட்களில் 6 லட்சம் பேர் பயணம் - அரசு போக்குவரத்துக் கழகம் தகவல்..!!
சென்னையிலிருந்து கடந்த 4 நாட்களில் அரசு பேருந்துகளில் 6 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
தொடர் முகூர்த்தம், பக்ரீத் மற்றும் வார விடுமுறை நாட்களையொட்டி பலர் பயணம் மேற்கொள்வார்கள் என்பதால் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் ஏராளமானோர் பயணம் மேற்கொண்டனர். அதன்படி கடந்த 4 நாட்களில் 6 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக மேலண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், முகூர்த்தம், பக்ரீத் பண்டிகை மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கத்தின் வாயிலாக, நேற்று 07.06.2025 நள்ளிரவு 24.00 மணி நிலவரப்படியும் மற்றும் இன்று 08.06.2025 அதிகாலை 02.00 மணி வரை சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளில் 2,092 பேருந்துகளும், 936 சிறப்புப் பேருந்துகளும் ஆக 3,028 பேருந்துகளில் 1,66,540 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
ஆக கடந்த 04.06.2025 முதல் 08.06.2025 அதிகாலை 02.00 மணி வரை 11,026 பேருந்துகளில் 6,06,430 பயணிகள் பயணித்துள்ளனர்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.


