நடுக்கடலில் கவிழ்ந்த விசைப்படகுகள் - தத்தளித்த நாகை மீனவர்கள் 7 பேர் மீட்பு

 
மீனவர்கள்

நாகையில் நடுக்கடலில் 2 விசைப்படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 7 மீனவர்கள் நடுக்கடலில் தத்தளித்த நிலையில், அவர்களை சக மீனவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். 

தமிழகத்தில் ஆண்டுதோறும் மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான மீன் பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்கியது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட 14 கடற்கரை மாவட்டங்களை சேர்ந்த 15,000 விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் மீன் பிடித்து துறைமுகம் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதை கருத்தில் கொண்டு மீனவ குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தலா  6000 ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. இந்த சூழலில் மீன் பிடி தடைக்காலம் நள்ளிரவுடன் முடிவுக்கு வந்தது.  இதன் காரணமாக படகுகளுக்கு பூஜை செய்து மீண்டும் மீன்பிடிக்க மீனவர்கள் உற்சாகமாக கடலுக்கு சென்றனர்.

இந்த நிலையில், நாகையில் நடுக்கடலில் 2 விசைப்படகுகள் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நாகைக்கு நேர் கிழக்கே 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடலில் மூழ்கியது. கீச்சாங்குப்பத்தை சேர்ந்த 7 மீனவர்கள் சுமார் 3 மணி நேரம் நடுக்கடலில் தத்தளித்தனர். உயிருக்கு போராடிய 7 மீனவர்கள் சக மீனவர்களால் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். 4 பேர் ஆபத்தான நிலையில் நாகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, மேலும் கடலில் கவிழ்ந்த விசைப்படகுகளை மீட்கும் பணியில் 2 பைபர் படகுகள், 12 மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.