பொள்ளாச்சி பாலியல் வழக்கு கைதிகளுக்கு சலுகை... 7 காவலர்கள் சஸ்பெண்ட் - சேலம் கமிஷனர் அதிரடி!

 
pollachi

நீதிமன்றத்திலிருந்து சிறைக்கு செல்லும் வழியில் பொள்ளாச்சி பாலியல் வழக்கு கைதிகளை உறவினர்களுடன் சந்தித்து பேச அனுமதி வழங்கிய 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தமிழக மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த வழக்கில், பாதிக்கப்பட்ட மாணவியின் சகோதரர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் திருநாவுக்கரசு, சபரி ராஜன், வசந்தகுமார் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பிறகு இந்த வழக்கு சிபிஐ வசம் மாற்றப்பட்டது.

van

சிபிஐ போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய போது அதிமுக பிரமுகர்கள் இதில் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிமுக பிரமுகர் அருளானந்தம், ஹேரன்பால் பாபு, அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொள்ளாச்சி வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த வசந்தகுமார், திருநாவுக்கரசு, மணிவண்ணன், சதீஷ் மற்றும் சபரிநாதன் ஆகியோர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். வழக்கு விசாரணை நடைபெற்று பெண்கள் அளித்த வாக்குமூலத்தின் நகல்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. நீதிபதி வரும் 28-ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார். இதையடுத்து, கைதிகள் அனைவரும் போலீசார் வாகனங்களில் மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

செல்லும் வழியில் சேலம் அருகே கருமத்தம்பட்டி பகுதியில் கைதிகள் சென்ற வாகனம் நின்றுள்ளது. கைதிகளின் உறவினர்கள் சிலர் அவர்களை சந்தித்து பேசியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக சர்ச்சையை கிளப்பிய நிலையில் கைதிகளுக்கு சலுகை அளித்த ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், காவலர்கள் பிரபு, வேல்குமார், ராஜ் குமார், ராஜேஷ் குமார், நடராஜன் மற்றும் கார்த்தி ஆகிய 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 7 பேரையும் பணியிடை நீக்கம் செய்து சேலம் மாநகர காவல் ஆணையர்  நஜ்மல் ஹோடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.