தமிழகத்திற்கு 7,200 புதிய பேருந்துகள்.. பழைய பேருந்துகள் விரைவில்.. - அமைச்சர் சிவசங்கர் தகவல்..

 
 பேருந்துகள் இயக்கம்  பேருந்துகள் இயக்கம்


தமிழ்நாட்டில் இயங்கும் 1,500 பழைய பேருந்துகள் விரைவில் புதுப்பிக்கப்படும் எனவும், மேலும்7,200 பேருந்துகள் வாங்க உள்ளதாகவும்  போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 

கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இன்று 23 புதிய பேருந்துகளின் சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.  இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் 7200 புதிய பேருந்துகள் வாங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.  1500 பழைய பேருந்துகள் விரைவில் புதுப்பிக்கப்படும்.  500 மின்சார பேருந்துகள் வாங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.  இதில் 100 பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. அரசு விரைவு பேருந்து கழகத்திற்கு 200 புதிய பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில்  அடுத்த வாரம் 30 பேருந்துகள் இயக்கப்படும் . 

சிவசங்கர்

தமிழக அரசின் நல்ல நல்ல திட்டங்களால் அரசு பள்ளிகளிலும் அரசு கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. மாணவர்கள் வசதிக்காக அரசு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் .. போக்குவரத்து கழக தொழிலாளர்கள் பேச்சுவார்த்தை தொடர்பாக ஊதிய குழு அமைக்கப்பட்டுள்ளது.  அந்த குழு பேச்சு வார்த்தை நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. 

அரசு பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் செய்வதை ஈடுகட்டும் வகையில் தமிழக அரசு 2,800 கோடி ரூபாயை போக்குவரத்துக் கழகத்திற்கு வழங்கி உள்ளது. இதன் மூலம் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் முதல் தேதி ஊதியம் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது .

வார இறுதி நாட்களில் நவகிரக கோவில்களுக்கு இயக்கப்படும் பேருந்துக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.  இதன் மூலம் 9,500 நபர்கள் பலன் பெற்றுள்ளனர் . தற்போது தினம்தோறும் ஒரு ஏசி பேருந்தும், ஒரு சாதாரண பேருந்தும் இயக்கப்பட்டு வருகிறது. இதனைப் போலவே அறுபடை வீடு கோவில்களுக்கு அரசு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்தார்..