வரும் சனிக்கிழமை 7ஆவது மெகா தடுப்பூசி முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

 
subramani

அக்டோபர் 30ம் 7ஆவது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தும் விதமாக ஒவ்வொரு வாரமும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக 5 வாரங்களாக ஞாயிற்றுக் கிழமைகளில் முகாம்கள் போடப்பட்டது. ஆனால், மது பிரியர்களும் அசைவ பிரியர்களும் ஞாயிற்றுக் கிழமையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டியதால் கடந்த முறை 6ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமையில் அமைக்கப்பட்டது.

subramaniyan

கடந்த சனிக்கிழமை தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு  22 லட்சத்து 33 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அன்றைய தினம் இரண்டாம் டோஸ் செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், வரும் சனிக்கிழமை 7ம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், அக்.30ம் 7ம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. இரண்டு லட்சத்திற்கும் குறைவானவர்கள் தான் இரண்டாவது தவணை கோவாக்சின் தடுப்பூசி போட வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் 2வது தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியவர்களின் எண்ணிக்கை 60 லட்சமாக உள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் முன்வர வேண்டும் என்று கூறினார். மேலும், 11 மருத்துவக் கல்லூரிகளில் முழு மாணவர் சேர்க்கைக்கு அனுமதி தர கோரியும் மாவட்ட அரசு மருத்துவமனைகள் அமைக்க நிதி வழங்க கோரியும் நாளை டெல்லியில் கோரிக்கை வைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.