தாய் திட்டியதால் 8ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் தாய் திட்டியதால் 8ம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஜெ.ஜெ.நகரில் வசித்து வருபவர் அழகுமணி. இவரது மனைவி நல்லம்மாள் அரசு போக்குவரத்து பணிமனை எதிரே பலகாரக்கடை நடத்திவருகிறார். இவர்களுக்கு பூபதி(13), கார்த்திகேயன்(11) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் பொன்னமராவதியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை சகோதரர்கள் இருவரும் சண்டையிட்டுள்ளனர். இதைக்கண்ட அவரது தாயார் நல்லம்மாள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் அழுதுகொண்டே இருந்த சிறுவன் பூபதி கடையிலிருந்து அனைவரும் உணவருந்துவதற்காக வீட்டிற்கு சென்றபோது அவர்களது பலகாரக்கடையினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக புறப்படுகிறது. இதனை அடுத்து வீட்டிற்கு சென்றவர்கள் மீண்டும் பலாகார கடைக்கு சென்று பார்க்கும் பொழுது பூபதி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதுள்ளனர். இதனையடுத்து பொன்னமராவதி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை எடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பொன்னமராவதி போலீசார் பூபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தாய் திட்டியதற்காக எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெற்றவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.