சென்னையில் இருந்து 9 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

 
BUS

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கடந்த 2 நாட்களில் மட்டும் ரயில் மற்றும் பேருந்து மூலம் 9 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். 

நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் வசிக்கும் வெளியூர் வாசிகள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். அவர்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் 6 பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை விட கூடுதலாக 10,588 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.  பெரும்பாலானோர் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். ஆனால், பேருந்து நிலையத்துக்கு வந்து பயணச்சீட்டு பெறுவோரிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.போக்குவரத்துத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு, அதிகமாக வசூலித்த கட்டணத்தை திருப்பி அளிக்கச் செய்ததுடன், விதிமீறலில் ஈடுபட்ட ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர்.

இதேபோல, தீபாவளியை முன்னிட்டு திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில் உள்ளிட்ட ஊர்களுக்கு மொத்தம் 38 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில் நிலையங்களில் மக்கள் குவிந்தனர். இதுவரை ரயில்களில் 3.42 லட்சம் பேர், அரசுப் பேருந்துகளில் 4 லட்சம் பேர், ஆம்னி பேருந்துகளில் 55 ஆயிரம் பேர் பயணித்துள்ளனர். இதுதவிர ரெயில்கள், கார்கள் உள்பட பிற வழி போக்குவரத்து மூலம் ஒட்டுமொத்தமாக  லட்சத்துக்கும் மேற்பட்டோர் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு சென்றிருப்பதாக கூறப்படுகிறது.