"பொது இடங்களில் புகைக்கத் தடை" - அன்புமணி அறிக்கை நகல் சட்டத்தை தலைமைச் செயலகத்தில் ஒப்படைப்பு!!

 
tn

பொது இடங்களில் புகைக்கத் தடை சட்டத்தை  செயல்படுத்த வேண்டும் என்ற  அன்புமணி அறிக்கையின்  நகல் தலைமைச் செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ttn

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த 23ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் அவற்றின் மீது அதிக வரி விதிக்கும் முறையை நான் மத்திய சுகாதார அமைச்சராக இருந்த போது அறிமுகப்படுத்தினேன். ஆனால், அந்த நடைமுறை தொடரவில்லை. சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களின் சில்லறை விலையில் 75% வரியாக இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால், இந்தியாவில் 28% ஜி.எஸ்.டி வரி மற்றும் கூடுதல் தீர்வைகளையும் சேர்த்து 52% வரி மட்டுமே வசூலிக்கப்படுகிறது. இது போதுமானதல்ல. இந்தியாவில் இப்போது ரூ.15க்கு விற்பனை செய்யப்படும் ஒரு சிகரெட்டின் விலையை குறைந்தது ரூ.22 ஆக உயர்த்தினால் மட்டும் தான் அதன் பயன்பாட்டை குறைக்க முடியும்.

அதேபோல், பொது இடங்களில் புகை பிடிக்க விதிக்கப்பட்ட தடையை கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாடு உள்ளிட்ட எந்த அரசும் முறையாக செயல்படுத்தவில்லை. பெண்கள், குழந்தைகளுக்கு இதய நோய், நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கு பொது இடங்களில் புகை பிடிப்பது தான் முக்கிய காரணமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
தொற்றா நோய்களால் ஏற்படும் உயிரிழப்புகளை 2030-ஆம் ஆண்டுக்குள் மூன்றில் ஒர் பங்கு குறைக்க வேண்டும் என்பது நீடித்த வளர்ச்சி இலக்குகளில் ஒன்றாகும். ஆனால், அதை நோக்கி இந்தியா உள்ளிட்ட எந்த நாடும் பயணிக்கவில்லை என்பது தான் வேதனையளிக்கும் உண்மையாகும். இதய  நோய்கள், நீரிழிவு நோய், சுவாச நோய் ஆகியவற்றை தவிர்ப்பது/கட்டுப்படுத்துவது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அதற்கான நடவடிக்கைகளையும் மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். புற்றுநோயைத் தடுக்கும் நோக்கத்துடன் புகையிலை பயன்பாட்டை கட்டுப்படுத்தவும்  எனது பதவிக் காலத்தில் தொடங்கப்பட்ட நடவடிக்கைகளை அரசுகள் தீவிரமாக செயல்படுத்த வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

tn

இந்நிலையில்  இந்தியாவில் புற்றுநோய் உள்ளிட்ட தொற்றாநோய்களால் ஆண்டுக்கு 60.46 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், புற்றுநோய் பரவலைக் கட்டுப்படுத்த பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை  விதிக்கும் சட்டத்தை தீவிரமாக செயல்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடந்த 23-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

tn

அந்த அறிக்கையின் நகல்களை ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட பா.ம.க. அமைப்பு செயலாளர் மு.ஜெயராமன்,  சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை செயலாளர் முனைவர் கார்த்திகேயன், மருத்துவத்துறை செயலாளர் டாக்டர் செந்தில் குமார் ஆகியோரிடம் வழங்கினார்.  தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு உள்ளிட்ட அனைத்து துறை செயலாளர்களின் அலுவலகங்களிலும்  அறிக்கையின் நகல்கள் ஒப்படைக்கப்பட்டன.  ஒருங்கிணைந்த சென்னை மாவட்ட பா.ம.க. அமைப்பு தலைவர் ஈகை. தயாளன்,  மாவட்ட செயலாளர் முத்துக்குமார், பகுதி செயலாளர் கோபி ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.