ஜனநாயக உரிமை பறிக்கும் காவல்துறையின் செயலுக்கு முத்தரசன் கண்டனம்!!

 
mutharasan

 ஜனநாயக விரோதச் செயலில்  ஈரோடு மாவட்டக் காவல்துறை ஈடுபட்டு வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது என்று முத்தரசன் தெரிவித்துள்ளார். 

இதுக்குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் ஆளுநர் திரு ஆர் என் ரவியின் அதிகார அத்துமீறல் நடவடிக்கைகளை ஒட்டுமொத்த தமிழ்நாடும் கண்டித்து வருகிறது. தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்களும் கடந்த 09.11.2022 ஆம் தேதி குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து, தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர்.என் ரவி, அந்தப் . பொறுப்பில் நீடிக்க தகுதியில்லாதவர் என்பதற்கான காரணங்களை தெரிவித்து, அவரை அப்பொறுப்பில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். 

mutharasan

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு" ஒன்றிய அரசு தலையிட்டு, ஆளுநர் பொறுப்பில் இருந்து திரு ஆர் என் ரவியை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வரும் 29.12.2022 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை இயக்கத்தை அறிவித்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள அடிப்படை உரிமைகள் அனுமதிக்கும் வகையில் ஆளுநரின் அதிகார அத்துமீறலை எதிர்த்து நடைபெறும் இயக்கத்தை பொதுமக்களுக்கு தெரிவிக்கவும், அவர்களது ஆதரவை திரட்டவும் தமிழ்நாடு முழுவதும் விளம்பரங்கள்  செய்யப்பட்டு வருகின்றன.

police

இந்த முறையில் ஈரோடு மாவட்டத்தில் சுவரொட்டிகள் ஒட்டி வரும்  கட்சியின் நிர்வாகிகள் மீது புஞ்சைப் புளியம்பட்டி, பவானிசாகர். தாளவாடி, ஆசனூர் உள்ளிட்ட  காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்துள்ளதுடன், நகராட்சி மற்றும் ஊரக வளர்ச்சி பணியாளர்களையும், அதுவலர்களையும் நிர்பந்தித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை கிழித்து வரும்  ஜனநாயக விரோதச் செயலில்  ஈரோடு மாவட்டக் காவல்துறை ஈடுபட்டு வருவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாடு அரசு உடனடியாக தலையிட்டு காவல்துறை பதிவு செய்துள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், சுவரொட்டிகளை கிழிக்கும்படி உத்தரவிட்ட அலுவலர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஜனநாயக உரிமைகளை  பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.