அம்மா இருசக்கர வாகனத் திட்டத்திற்கு மூடு விழா நடத்தியுள்ள தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனம் - ஓ.பி.எஸ்.

 
ops ops

அம்மா இருசக்கர வாகனத் திட்டத்திற்கு மூடு விழா நடத்தியுள்ள தி.மு.க. அரசிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

பன்னீர்செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் தோற்றுவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்ததப்பட்டு வந்த திட்டங்களான தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம், அம்மா மினி கிளினிக், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்பட்டு வந்த 2,500 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை ரத்து செய்தது, அம்மா உணவகங்களின் பெயர்களை மாற்றுவது என்ற வரிசையில் அம்மா மகளிர் இரு சக்கர வாகனத் திட்டம் முடக்கப்பட்டு இருக்கிறது என்பதை நேற்று சூசகமாக மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அறிவித்து இருப்பது முழுக்க முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டது.

ops

நேற்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் பேசிய மாண்புமிகு 'ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர், நகரப் பேருந்துகளில் பயணிப்பதற்கு தாய்மார்கள், சகோதரிகளுக்கு இலவசமாக பயணம் செய்கின்ற வாய்ப்பை மாண்புமிகு முதலமைச்சர்  தந்து இருக்கிறார் என்றும், பெட்ரோல், டீசல் விலை இன்றைக்கு உயர்ந்திருக்கின்ற இந்த நிலையில் இரு சக்கர வாகனத் திட்டம் தொடர்ந்தால், இன்னும் அவர்களுக்கு மேலும் கூடுதல் சுமையாக இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார். அதாவது, இந்தத் திட்டம் கைவிடப்பட்டு விட்டது என்பதுதான் இதற்குப் பொருள். தி.மு.க. அரசின் இந்தச் செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.அம்மா இருசக்கர வாகனத் திட்டத்திற்கு மாற்றாக மகளிர் இலவசப்  பேருந்து திட்டத்தை ஒப்பிடுவது நியாயமற்ற செயல். ஒரு திட்டத்திற்கு மாற்றாக இன்னொரு திட்டத்தை கூறுவது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. 

இன்னும் சொல்லப் போனால், இலவசப் பேருந்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும், நாட்கள் செல்ல செல்ல மகளிர் இலவசப் பேருந்து திட்டம் நீர்த்துப் போய்விடுமோ என்ற அச்சத்தில் மகளிர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்தத் திட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது என்பதாலும், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் 'அம்மா' என்கிற அடைமொழியுடன் கூடியத் திட்டம் என்பதாலும், இத்திட்டத்தை தி.மு.க. அரசு முடக்கியுள்ளது. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட ஒவ்வொரு திட்டத்திற்கும் மூடுவிழா நடத்தும் வேலையைத்தான் தி.மு.க. அரசு செய்து கொண்டிருக்கிறது.

' சொன்னதை செய்வோம்' என்பதைவிட 'சொல்லாததையும் செய்வோம்' என்பதுதான் கடந்த பதினோறு மாத கால தி.மு.க. ஆட்சியின் சாதனை. கொடியவன் என்று மக்களிடம் கெட்ட பெயர் வாங்கும் அரசனின் ஆட்சி விரைவில் வீழ்ந்து விடும் என்று வள்ளுவரின் வாக்கினை மனதில் நிலை நிறுத்தி, அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தினை ரத்து செய்யும் முடிவினை கைவிட வேண்டுமென்று முதலமைச்சரை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.