மேகதாது அணை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் - ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

 
ops

மேகதாது அணை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் எனவும், சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவேரி நடுவர் மன்றத் தீர்ப்பிற்கு முற்றிலும் முரணான வகையில், வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கர்நாடக முதலமைச்சர் மேகதாது அணை தொடர்பாக பேசிய கருத்து அதிர்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். 
செய்தியாளர்களிடையே பேசிய கர்நாடக மாநில முதலமைச்சர், மேகதாது உள்ளிட்ட நீர்ப் பகிர்வு திட்டங்கள் குறித்து விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்படும் என்றும், இது குறித்து கர்நாடக சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும் என்றும், இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு மத்திய நீர்வளத் துறை அமைச்சரைக் கேட்டுக் கொள்ளப் போவதாக கூறியதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார். 

mekathathu

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு மறுத்து வருகின்ற நிலையில், உபரி நீர்தான் தமிழ்நாட்டை வந்தடைகிறது. இந்த உபரி நீரையும் தேக்கி வைத்துக் கொள்ள வேண்டுமென்ற அடிப்படையில் மேகதாது அணை கட்டப்பட வேண்டும் என்று தேசிய கட்சிகள் உள்ளிட்ட கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூறி வருவதாக தெரிவித்துள்ளார். 

cong bjp

அதே சமயத்தில் தமிழ்நாட்டில் உள்ள தேசிய கட்சிகள் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டும் வகையில் கருத்து தெரிவிக்காதது வருத்தமளிக்கும் செயலாகும் எனவும், மேகதாது அணை கட்டப்பட்டால், காவேரி ஆற்றிலிருந்து கீழ்மடை மாநிலமான தமிழ்நாட்டிற்கு வருகின்ற உபரி நீரும் நின்றுவிடும் சூழ்நிலை ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனால் காவேரி நீரை நம்பி விவசாயம் செய்யும் வேளாண்பெருமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதும், வேளாண் உற்பத்திவெகுவாக பாதிக்கப்படும் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று என குறிப்பிட்டுள்ளார். 

ops

எனவே மேகதாது அணை கட்டப்படுவது கட்டாயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்பதும், பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதும் தான்தமிழ்நாட்டின்  நிலைப்பாடு என்பதால், தமிழ்நாடு முதலமைச்சர்  உடனடியாகத் தலையிட்டு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டவும், மேகதாது அணை கட்டப்படும் என்ற கர்நாடக அரசின் கோரிக்கையை நிராகரிக்க மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.