கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் வீணடிக்கப்படுவதை தடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

 
ops

கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் வீணடிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது: நுகர்வோரின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், தரமான பொருட்கள் மற்றும் சேவைகள் தங்கு தடையின்றி நியாயமான விலையில் நுகர்வோர்களுக்கு கிடைக்கப் பெறுவதையும், நுகர்வோர் நலன்களுக்கான திட்டங்கள் மேம்படுத்தப்படுவதையும், அழுகும் பொருட்கள் வீணடிக்கப்படுவது தவிர்க்கப்படுவதையும் கண்காணிக்கும் பொறுப்பும், கடமையும் மாநில அரசிற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.கடந்த ஒரு வார காலமாக ஐந்து டன் எடை கொண்ட நல்ல காய்கறிகள் கோயம்பேடு சந்தை வளாகத்திலுள்ள திறந்த வெளியில் கொட்டி கிடப்பதாகவும், இதற்குக் காரணம் கூடுதல் வரத்து மற்றும் குளிர்சாதன வசதி இல்லாதது என்றும், தற்போதுள்ள உணவுப் பொருள் கிடங்கினை குளிர்சாதன வசதி கொண்ட கிடங்காக மாற்றுவது குறித்து அரசாங்கத்தினை அணுகி இருப்பதாகவும்,  காய்கறி கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையை உயிர்பிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று  வருவதாகவும் பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன.

Koyambedu

நல்ல தரமான கால்கறிகள் யாருக்கும் பயனில்லாமல் வினாடிக்கப்படுவது என்பது எற்றுக்கொள்ள முடியாத ஒன்று. காய்கறிகளை சேமித்துக் கொள்ள எதுவாக குளிர்சாதன கிடங்கு ஒன்றினை கோயம்பேடு வணிக வளாகத்திற்குள் ஏற்படுத்தவும், அதிக வரத்து காரணமாக குறைந்தவிலையில் காய்கறிகள் கிடைக்கும்போது அதனை அரசே கொள்முதல் செய்து சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று ஏழை எளிய மக்களிக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்பு காய்கறி மொத்த விற்பனையாளர்களிடையேயும் ,சிறு விற்பனையாளர்களிடையேயும், நுகர்வோர்களிடையேயும் தற்போது உள்ளது. இதுபோன்ற அரசின் நடவடிக்கை அனைவருக்கும் பயனளிப்பதாக அமையும்.எனவே,  தமிழ்நாடு முதலமைச்சர்  இதில் உடனடியாகத் தலையிட்டு, கோயம்போடு வணிக வளாகத்தில் காய்கறிகள் வீணாக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் குளிர்சாதன கிடங்கு அமைத்துத் தரவும், காய்கறிகளை குறைந்த விலையில் மக்களிடையே சேர்க்கவும், வியாபாரிகளுக்கு இலாபம் ஏற்படுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.