சொத்துவரி உயர்வைக் கண்டித்து வருகிற 5ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் - அதிமுக அறிவிப்பு..

 
சொத்துவரி உயர்வைக் கண்டித்து வருகிற 5ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்  - அதிமுக அறிவிப்பு..

சொத்து வரி உயர்வைக் கண்டித்து  வருகிற 5ஆம் தேதி  தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,  இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் , “  ஆட்சிக்கு வந்த திமுக-வின்‌ இருள்‌ சூழ்ந்த ஆட்சி மக்கள்‌ மீது சுமைகளை ஏற்றிக்கொண்டே செல்கிறது. எடுத்துக்காட்டாக, தாலிக்குத்‌ தங்கம்‌, அம்மா மினி கிளினிக்‌ போன்ற புரட்சிகரமான திட்டங்களை ரத்து செய்ததோடு மட்டுமல்லாமல்‌, மக்களை துன்பத்தில்‌ ஆழ்த்தும்‌ சொத்து வரி உயர்வு போன்ற கடுமையான நடவடிக்கைகளை,மனசாட்சியை கழற்றி வைத்துவிட்டு திமுக அரசு மேற்கொண்டிருக்கிறது.

வரி

 தமிழ்‌ நாட்டில்‌ சொத்து வரி  உயர்த்தப்படமாட்டாது என்று தனது தேர்தல்‌ அறிக்கையில்‌ எண்‌. 487-ஆவது வாக்குறுதியாக மக்களுக்கு உறுதி அளித்த திமுக, கொரோனாவினால்‌ ஏற்பட்ட பொருளாதார இழப்பில்‌ இருந்து மக்கள்‌ மீளமுடியாமல்‌ அல்லல்பட்டுக்‌ கொண்டிருக்கும்‌ இந்த நேரத்தில்‌, 150 சதவீதம்‌ வரை சொத்து வரியை உயர்த்தி இருப்பது, பச்சைத்‌ துரோகம்‌ ஆகும்‌.

 தேர்தல்‌ நேரத்தில்‌ கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல்‌, மக்களை ஏமாற்றும்‌ வகையில்‌ தொடர்ந்து செயல்பட்டு, சொத்து வரியை உயர்த்தி இருக்கும்‌ திமுக அரசைக்‌  கண்டித்தும்‌; மக்கள்‌ நலனைக்‌ கருத்தில்கொண்டு சொத்து வரி உயர்வினை உடனடியாக சார்பில்‌ 5.4.2022 - செவ்வாய்க்‌ கிழமை காலை 10 மணியளவில்‌, வருவாய்‌ மாவட்டத்‌ தலைநகரங்களில்‌ மாபெரும்‌ கண்டன ஆர்ப்பாட்டங்கள்‌ நடைபெறும்‌. இந்தக்‌ கண்டனஆர்ப்பாட்டங்களுக்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்கள்‌ செய்திட வேண்டும்‌ என்று கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

உள்ளாட்சி தேர்தல்… 6 பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக!

இந்தக்‌ கண்டன ஆர்ப்பாட்டங்களில்‌, சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச்‌ சேர்ந்த தலைமைக்‌ கழக நிர்வாகிகளும்‌, முன்னாள்‌ அமைச்சர்களும்‌, கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்‌, உள்ளாட்சி அமைப்புகளின்‌ பிரதிநிதிகளும்‌, கழகத்தில்‌ பல்வேறு நிலைகளில்‌ பணியாற்றி வரும்‌ நிர்வாகிகளும்‌, பொதுமக்களும்‌ பெருந்திரளான அளவில்‌ கலந்துகொண்டு, திமுக அரசின்‌ மக்கள்‌ விரோத நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமென கேட்டுக்‌ கொள்கிறோம்‌.”  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.