அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரிய வழக்கு - இன்று விசாரணை

 
ops eps

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 23ஆம் தேதி  காலை 10 மணிக்கு, சென்னை , வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. தற்காலிக அதிமுக  அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன்  தலைமையில் நடைபெற உள்ளது.  இதற்காக அதிமுக  செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுகவின் பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரி திண்டுக்கல் மாவட்டம், ஆவிலிபட்டியைச் சேர்ந்த அ.தி.மு.க., உறுப்பினர் எஸ்.சூரியமூர்த்தி சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவர் வகித்து வந்த பொதுச்செயலாளர் பதவியை சசிகலா வகித்து வந்த நிலையில், அவர் சிறைக்கு சென்ற பின்னர் அந்த பதவியை நீக்கி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதாகவும், இந்த பதவிகளை எந்த நீதிமன்றமும் அங்கீகரிக்கவில்லை எனவும், பொதுச்செயலாளர் பதவியை நீக்கியது சரி என்று எந்த நீதிமன்றமும் கூறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த சூழ்நிலையில், வருகிற 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டத்திற்கு புறம்பாக கூடும் இந்த கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார். 

admk

இந்த மனு கடந்த 12ம் தேதி மனு, நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதி பிரியா, விசாரணையை வரும், 16ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இதனை தொடர்ந்து இன்று மீண்டும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெறவுள்ளது.