வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை - 296 யோசனைகளை தமிழக அரசுக்கு தெரிவித்த பாமக!!

 
tn

தமிழக அரசுக்கு பாமக முன்வைக்கும் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. 

pmk

தமிழ்நாட்டில் வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பல ஆண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருவதன் பயனாக, முதன் முறையாக கடந்த ஆண்டில் வேளாண் துறைக்கு தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 2022&23 ஆண்டும் வேளாண் நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ளது. தமிழக அரசின் முதல் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், நடப்பாண்டின் நிதிநிலை அறிக்கையிலாவது சிறப்புத் திட்டங்கள் இடம்பெற வேண்டும் என்று பாமக விரும்புகிறது. அதை உறுதி செய்யும் வகையில், இந்த ஆண்டிற்கான பாட்டாளி மக்கள் கட்சியின் 15ஆவது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை சிறப்பு கவனத்துடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதில் 87 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. 

pmk

நியாயவிலைக் கடைகளில் நாட்டுச் சர்க்கரை, சிறுதானிய விற்பனை நிலையங்கள் & உணவகங்கள்,வட்டம் தோறும் குளிர்ப்பதனக் கிடங்குகள், வெள்ள பாதிப்பு & ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு, மணல் குவாரிகள் திறக்கப்படாது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அத்துடன் தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட முதல் வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட சுமார் 40 திட்டங்களில் 26 திட்டங்கள் இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை என்றும் தெரிவித்துள்ளது.


அவற்றில் சில பின்வருமாறு:-

1.வேளாண் துறையில் இயற்கை வேளாண்மைக்கு தனிப் பிரிவு தொடங்கப்படும்.
2. நெல் ஜெயராமன் அவர்களின் மரபுசார் நெல் ரகங்கள் பாதுகாப்பு இயக்கம்.
3. இளைஞர்களை வேளாண் தொழில்முனைவோர் ஆக்குதல்.
4. ஊரக இளைஞர் வேளாண் திறன் மேம்பாட்டு இயக்கம்.
5. சிறு தானிய இயக்கம்
6. ஏற்றம் தரும் எண்ணெய் வித்துகள் திட்டம்.
7. தென்னை உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கான “சீர்மிகு தென்னை சாகுபடி”
8. அண்ணா பண்ணை மேம்பாட்டுத் திட்டம்.
9. கூட்டுப் பண்ணையத் திட்டம்
10. அதிக வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணையம்
11. சென்னையில் மரபுசார் வேளாண்மைக்கான அருங்காட்சியகம் அமைக்கும் திட்டம்
12. வேளாண்மையில் சிறப்பாக செயல்படும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கும் திட்டம்
13. மாநில அளவிலான வேளாண் உயர்நிலைக் குழு அமைக்கும் திட்டம்
14. நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த ஊட்டச்சத்து தழைகள் வழங்கும் திட்டம்
15. தோட்டக்கலை முதன்மை மாவட்டங்கள் திட்டம்.
16. கடலூர் மாவட்டத்தில் பலாவிற்கான சிறப்பு மையம் அமைக்கும் திட்டம்.
17. வடலூரில் புதிய அரசுத் தோட்டக்கலை பூங்கா அமைக்கும் திட்டம்.
18. சிக்கன நீர்ப்பாசனத் திட்டம் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு சுட்டிக்காட்டியுள்ளது.

pmk

வேளாண்துறை வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு வசதியாக மொத்தம் 82 தலைப்புகளில் 296 யோசனைகளை தமிழக அரசுக்கு தெரிவித்திருக்கிறோம் என்றும்  இவற்றை பா.ம.க.வின் திட்டங்களாக கருதாமல், வேளாண் பெருமக்களின் கோரிக்கையாக கருதி  இவற்றில் அரசுக்கு சாத்தியமானவற்றை மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக  அரசின் இரண்டாவது வேளாண் நிதிநிலை அறிக்கையில் சேர்க்க வேண்டும்; நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் பா.ம.க.வின் விருப்பமும் வேண்டுகோளும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.