"அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதி" - ராமதாஸ் வேதனை!

 
pmk

2015-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த அனைத்து உதவி பேராசிரியர்களுக்கும் உடனடியாக பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசுக்கு சொந்தமான கலை மற்றும் கல்லூரிகளுக்கு 1093 உதவி பேராசிரியர்கள் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டனர். உதவி பேராசிரியராக தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் சேர்ந்த நாளில் இருந்து ஓராண்டு தகுதி காண் பருவமாக (Probation Period)கருதப்படும். இந்தக் காலத்தில் அவர்களின் கல்விச் சான்றிதழ் சரிபார்ப்பு, கடந்த கால நடத்தைகள், பணித்திறமை ஆகியவை ஆய்வு செய்யப்படும்.

teachers

ஓராண்டு தகுதிகாண் பருவம் முடிவடைந்தவுடன், அவர்களுக்கு பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கப்படும். இந்த நடைமுறைப்படி 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அவர்களுக்கு பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மொத்தம் 7 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் கூட, 1093 ஆசிரியர்களுக்கும் பணிநிலைப்பு சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கு பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கப்படாதது அத்துடன் முடிந்து விடும் பிரச்சினை இல்லை.

pmk

பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கப்படாததால், அதனடிப்படையில் ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய எந்த உரிமையும் இன்று வரை வழங்கப்படவில்லை. வழக்கமான தகுதிகளுடன் உதவிப் பேராசிரியராகப் பணியில் சேருபவர்களுக்கு ஐந்தாவது ஆண்டில் முதலாவது பணிநிலை மற்றும் ரூ.1000 தர ஊதிய உயர்வு வழங்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் இரண்டாவது பணி நிலை உயர்வு மற்றும் ஊதிய உயர்வும், அடுத்த 3 ஆண்டுகளில், அதாவது 13-ஆவது ஆண்டில் இணைப் பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும்.ஆனால், இன்னும் பணி நிலைப்பு சான்றிதழே வழங்கப்படாததால் இரு ஆண்டுகளுக்கு முன் கிடைத்திருக்க வேண்டிய பணிநிலை உயர்வு மற்றும் தர ஊதிய உயர்வு கிடைக்கவில்லை. அடுத்த 3 ஆண்டுகளில் இரண்டாவது பணிநிலை உயர்வு மற்றும் தர ஊதிய உயர்வு கிடைக்குமா? என்பதும் மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.கல்லூரிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நடக்கும் குளறுபடிகள் தான் அனைத்து தாமதத்திற்கும், அநீதிக்கும் காரணம் ஆகும். பணியில் சேர்ந்த உதவிப் பேராசிரியர்கள் தங்களது சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை நிரூபிப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்து விட்டனர். ஆனால், பணியில் சேர்ந்த பிறகு உயிரிழந்த உதவி பேராசிரியர்கள், நியமிக்கப்பட்ட பிறகும் பணியில் சேராத உதவி பேராசிரியர்கள் ஆகியோரைப் பற்றிய விவரங்களையும் கல்லூரிகளிடமிருந்து இயக்குனர் அலுவலகம் கோருகிறது. இல்லாத உதவி பேராசிரியர்களின் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகங்கள் எவ்வாறு வழங்க முடியும்?

pmk

அதுமட்டுமின்றி, 2015-ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட உதவி பேராசிரியர்கள் எவ்வளவு பேர்? பணியில் சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர்? இப்போது பணியில் இல்லாதவர்கள் எவ்வளவு பேர்? என்பது குறித்த விவரங்கள் கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இல்லை. இது தான் குழப்பங்களுக்கு காரணம் ஆகும். கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகம் நினைத்தால், அனைத்து அரசு கல்லூரிகளில் இருந்தும் விவரங்களைப் பெற்று தணிக்கை செய்து இந்த சிக்கலுக்கு தீர்வு காண முடியும்.ஆனால், கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகம் இன்று வரை அதை செய்யவில்லை. இயக்குனர் அலுவலகத்தின் தவறுக்கு உதவி பேராசிரியர்கள் ஏன் பணிநிலை உயர்வையும், தர ஊதிய உயர்வையும் இழக்க வேண்டும்? 2015-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த பலர் கடந்த சில ஆண்டுகளில் ஓய்வு பெற்று விட்டனர்.ஆனால், அவர்களுக்கு பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பதால், அவர்களுக்கு ஓய்வுக்கால பயன்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு உடனடியாக தீர்வு காணப்படவில்லை என்றால், அடுத்த சில ஆண்டுகளில் கிடைக்க வேண்டிய இரண்டாவது பணி நிலை உயர்வையும், தர ஊதிய உயர்வையும் இழக்க வேண்டியிருக்கும். இது அவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி விடக்கூடும்.

govt

நிர்வாகத்தின் தரப்பில் நடந்த தவறுக்காக உதவி பேராசிரியர்கள் பாதிக்கப்படுவதை அரசு அனுமதிக்கக் கூடாது. எனவே, 2015-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த அனைத்து உதவி பேராசிரியர்களுக்கும் உடனடியாக பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். அதனடிப்படையில், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணிநிலை உயர்வையும், தர ஊதிய உயர்வையும் உரிய காலத்திலிருந்து கணக்கிட்டு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.