நீட் தேர்வுக்கு போதிய பயிற்சி அரசு சார்பில் அளிக்கப்படவில்லை என்பதை ஏற்க முடியாது - அன்பில் மகேஷ்
நீட் தேர்வுக்கு போதிய பயிற்சி அரசு சார்பில் அளிக்கப்படவில்லை என்பதை ஏற்க முடியாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி தெரிவித்துள்ளார்.
சென்னை கிறித்தவ மேல்நிலைப் பள்ளியில் பாரத சாரண சாரணியர் இயக்க நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பாரத சாரண சாரணிய இயக்க தமிழ்நாடு தலைவராக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பொறுப்பேற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, “கடந்தாண்டை காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையில் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தகுதி பெற்றுள்ள போதிலும் அந்த எண்ணிக்கை போதாது. நீட் தேர்வு தேர்ச்சியை பொருத்தவரை, தன்னிறைவு அடையும் வரை மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கப்படும். மாணவர்கள் தேசிய அளவில் நடைபெறக்கூடிய போட்டித் தேர்வுகளில் அதிக அளவு தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவே மாடல் பள்ளிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பாரத சாரண சாரணியர் இயக்கத்தில் தற்போது 4 லட்சமாக உள்ள மாணவர் எண்ணிக்கையை 10 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். அமைச்சராக பதவி ஏற்ற தருணத்தில், 'அன்பில் மகேஸ் ஆகிய நான்' என்று சொல்லும் போது எவ்வளவு பெருமையாக இருந்ததோ, அதேபோன்ற உணர்வு, தற்போது சாரணத் தலைவர் பதவியை ஏற்கும் போது தனக்கு ஏற்பட்டது. இப்பொறுப்பை ஏற்க வருவதற்கு முன், முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற சென்ற போது, முதல்வர் படித்த பள்ளியில் தான் இந்த பதவியை தாம் ஏற்றுக் கொள்வதாக கூறி பெருமை அடைந்தேன். இதனை பதவி என்றில்லாமல் பொறுப்பு என்று கூறுமாறு முதலமைச்சர் எடுத்துரைத்தார். சாரண, சாரணியர் உடை, தொப்பி அணிந்து முதலமைச்சருக்கு சல்யூட் அடித்த போது முதலமைச்சரும் நின்று அதனை ஏற்று கொண்டார். என்னென்ன தேவை இந்த இயக்கத்திற்கு உள்ளது என்பதை கண்டறிந்து, அதனை சரிசெய்ய அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். போட்டியின்றி தாம் தேர்வு செய்யப்பட்டதாக கூறினாலும் தலைவராகிய தனக்கும், உறுப்பினர்களுக்கும் இனி மேல் தான் போட்டியே தொடங்க உள்ளது. பள்ளி காலத்திற்கு பின், தற்போது தான் தனது சீருடையை தானே அயர்ன் செய்து போட்டேன்” எனக் கூறினார்.