தமிழகத்தில் ஊடுருவிய சர்வதேச போதைப்பொருள் கும்பல் தலைவன்? - அன்புமணி பரபரப்பு அறிக்கை

 
anbumani anbumani

இலங்கை வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவிய உலகின் மிகக்கொடிய போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனான முகமது நாஜிம் முகமது இம்ரானை கைது செய்து நாடு கடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.  

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: உலகின் மிகக்கொடிய போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனான முகமது நாஜிம் முகமது இம்ரான் தமது கூட்டாளிகளுடன் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஊடுருவியிருப்பதாக வெளியாகி உள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. எல்லையோர பாதுகாப்பு குறைபாடுகளையே இது காட்டுகிறது. மேலும் முகமது இம்ரான் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு தப்பி வரக்கூடும் என்று தமிழக உளவுத் துறைக்கு மத்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு பிறகும் கடலோரக் காவல் படை, தமிழகக் காவல்துறையின் பாதுகாப்பை மீறி முகமது இம்ரான் தமிழகத்தில் நுழைந்தது எப்படி?  

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் ஹெராயின், கோகெய்ன் கடத்தல் கும்பல்களுடன் முகமது இம்ரானுக்கு வலிமையான பிணைப்பு உண்டு. 2019-ம் ஆண்டில் துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட இம்ரான், அங்கு பிணையில் விடுதலையான நிலையில் தப்பி உள்ளான். தமிழ்நாட்டில் போதை மருந்து கலாச்சாரம் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் அதிகரித்துள்ளது. இத்தகைய சூழலில் முகமது இம்ரானின் ஊடுருவல் நிலைமையை மேலும் மோசமாக்க கூடும். முகமது இம்ரானை உடனடியாக கைது செய்து நாடு கடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.