"பிரதமரை முதல்வர் ஸ்டாலின் உடனடியாக சந்திக்க வேண்டும்" - அன்புமணி கோரிக்கை!!

 
anbumani

நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி  வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் எந்தத் துயரம் நடந்து விடக் கூடாது என்று அனைவரும் வேண்டிக் கொண்டிருந்தார்களோ, அந்தத் துயரம் ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக நிகழ்ந்திருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த முரளி கிருஷ்ணா என்ற மாணவர், மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ? என்ற அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். மாணவர் முரளி கிருஷ்ணா கடந்த 2021-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்புத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார். கடந்த ஆண்டே அவர் நீட் தேர்வு எழுதிய போதிலும், அவரால் மருத்துவப் படிப்பில் சேர முடியவில்லை. அதனால், வரும் 17-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வை எழுதி, மருத்துவம் பயில வேண்டும் என்ற நோக்கத்துடன் தேர்வுக்கு தயாராகி வந்தார். நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், நேற்று முன்நாள் புதன்கிழமை இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

neet

நீட் தேர்வுக்கு அஞ்சி தாம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணத்தை விளக்கி கடிதம் ஒன்றையும் முரளி கிருஷ்ணா எழுதி வைத்துள்ளார். அதில்,‘‘நீட் தேர்வு மிகவும் கடினமாக உள்ளது; மருத்துவப் படிப்பில் சேரும் அளவுக்கு மதிப்பெண் எடுக்க முடியாது என்பதால் தற்கொலை செய்து கொள்கிறேன்’’ என்று முரளி கிருஷ்ணா குறிப்பிட்டிருக்கிறார். ஒருபுறம் கிராமப்புற மாணவர்களால் நீட் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற முடியாது என்ற அச்சத்தால் ஏற்படும் அழுத்தம், மறுபுறம் தமது பிள்ளைகளை எப்படியாவது மருத்துவராக்கி விட வேண்டும் என்ற எண்ணத்தில் பெற்றோர்கள்  கொடுக்கும் அழுத்தம் ஆகிய இரண்டையும் தாங்கிக் கொள்ள முடியாத மாணவர்கள் தான் தேர்வுக்கு முன்பே தற்கொலை செய்து கொள்கின்றனர். நடப்பாண்டில் இந்த அழுத்தத்திற்கு இறையாகிய முதல் மாணவர் முரளி கிருஷ்ணா அல்ல... ஏற்கனவே கடந்த புதன்கிழமை சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இவை இனியும் தொடரக்கூடாது.மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு மிகப்பெரிய சமூக அநீதி. அது உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்பதில், சமூகநீதியில் அக்கறை கொண்டவர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், மாணவர்களின் தற்கொலைக்கு அவர்களிடம் தன்னம்பிக்கையும், விழிப்புணர்வும் இல்லாததும், அவர்களின் குடும்பத்தினரிடமிருந்து திணிக்கப்படும் அழுத்தமும் தான் மிக முக்கிய காரணம் ஆகும். நீட் தேர்வை எழுதுவது மருத்துவம் படிப்பதற்காக முயற்சி ஆகும். முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைக்க வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை; முதல் முயற்சியில் வெற்றி கிடைக்காவிட்டால் உலகமே நம்மை விட்டு விலகிச் சென்று விட்டதாக கருதி தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. அது கோழைத்தனம்.அதேபோல், மருத்துவப்படிப்பு மட்டுமே வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய உயர்படிப்பு அல்ல. வேலைவாய்ப்பும், சேவை வாய்ப்பும் இன்னும் அதிகமுள்ள ஏராளமான படிப்புகள் உள்ளன. அவற்றை தேடும் முயற்சியில் எந்தப் பெற்றோரும், மாணவர்களும் ஈடுபடுவதில்லை. மாறாக, கண்கள் மறைக்கப்பட்ட குதிரைகளைப் போல மருத்துவக் கல்வி என்ற ஒற்றை இலக்கை மட்டுமே அவர்கள் ஓடுகின்றனர். 

anbumani

அந்த இலக்கை எட்ட முடியாவிட்டால், அதை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர். மருத்துவக்கல்வி வாய்ப்பு கிடைக்க வில்லை என்றால் மாற்றுப் பாட வாய்ப்புகளை ஆராய வேண்டுமே தவிர, தற்கொலை செய்து கொள்ளக் கூடாது. இது தான் மாணவர்களுக்கு எனது வேண்டுகோள் ஆகும். மற்றொருபுறம் மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டும் நீட் தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு  விலக்கு அளிக்கக் கோரும் சட்டம் தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு 234 நாள் போராட்டத்திற்குப் பிறகு மே 3-ஆம் தேதி தான் மத்திய அரசுக்கு  ஆளுனர் மாளிகையிலிருந்து அனுப்பப்பட்டிருக்கிறது. அதன்பின் 67 நாட்களாகி விட்டன. இதற்கு மேலும் இந்த விஷயத்தில் தமிழக அரசு தாமதம் காட்டக்கூடாது. தமிழக முதலமைச்சர் உடனடியாக  தில்லி சென்று பிரதமரை சந்தித்து நீட்விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.நீட் தேர்வுக்கு இன்னும் 8 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், அத்தேர்வை எழுதவிருக்கும் மாணவர்கள் மத்தியில் நிலவும் அச்சம், அழுத்தம், மன உளைச்சல் ஆகியவற்றைப் போக்குவற்காக அவர்களுக்கு  தொலைபேசி வழியிலான கவுன்சலிங் வழங்க அரசு நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.