செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது பிரதமருக்கு பாதுகாப்பு குறைபாடு - அண்ணாமலை புகார்

 
Annamalai

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்காக பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தந்த போது சரியான பாதுகாப்பு இல்லை என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். 
 
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பானது இன்று காலை 10.30 மணியில் இருந்து சிறிது நேரம் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து அண்ணாமலை ஆளுநரிடம் புகார் அளித்ததாகவும்,  துணை ராணுவப் படை வீரர் குருமூர்த்தி குடும்பத்திருக்கு பாதுகாப்பு கோரி ஆளுநரை அண்ணாமலை வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டது. 

இந்நிலையில், ஆளுநரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாவது: சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்காக பிரதமர் மோடி தமிழகத்திற்கு வருகை தந்த போது சரியான பாதுகாப்பு இல்லை. பிரதமர் மோடி பங்கேற்ற நேரு உள்விளையாட்டு அரங்கில் பல மெட்டல் டிடெக்டர்கள் வேலை செய்யவில்லை. பிரதமருக்கு பாதுகாப்பு வழங்க முடியவில்லை எனில் சாதாரண மக்களுக்கு எப்படி தமிழக அரசு பாதுகாப்பு அளிக்கும். பாதுகாப்பு குறைபாடு விவகாரத்தில் தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் - கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம் உள்ளிட்டவற்றில் தமிழக அரசு சரியாக கவனம் செலுத்த வில்லை என குற்றம் சாட்டி ஆளுநரிடம் புகார் அளித்தோம். 

Annamalai and RN Ravi

மத்திய அரசின் கனவு திட்டமான வீடுகளுக்கு குடீநீர் வழங்க்கும் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற்று கோடிக்கணக்கில் முறைகேடு நடைபெற்றுள்ளது. வீடுகளுக்கு குடீநீர் வழங்கும் திட்டத்தில் நடைபெற்ற முறைகேட்டை பகுப்பாய்வு செய்ய ஆளுநரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக கவர்னரிடம் வலியுறுத்தப்பட்டது. ஆன்லைன் ரம்மி தடை அவசர சட்டத்திற்கு அரசாணை கூட பிறப்பிக்கப்படவில்லை. சட்டம் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்வது ஆளுநரின் கடமை. கவர்னர் வேலை செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. இவ்வாறு கூறினார்.