திமுகவின் இந்தி அரசியலை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் - கடலூரில் அண்ணாமலை பங்கேற்கிறார்

 
annamalai

இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் திமுக அரசு செய்து வரும் அரசியலை கண்டித்து கடலூரில் வருகிற 27ம் தேதி பாஜக சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் கலந்துகொள்கிறார். 

புதிய கல்விக்கொள்கை மூலம் மத்திய அரசு தமிழகத்தில் இந்தி மொழியை திணிக்க முயன்று வருவதாக திமுக குற்றம் சாட்டியது. மத்திய பாஜக அரசின் இந்த முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில்,  இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் தி.மு.க நடத்தும் அரசியலை கண்டிதும், தமிழை பாதுகாக்க வலியுறுத்தியும் வருகிற 27-ந் தேதி அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை அறிவித்து இருந்தார். 

Annamalai

அதன்படி கடலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொள்கிறார். நாகர்கோவிலில் முன்னாள் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், நெல்லையில் நயினார் நாகேந்திரன், கோவையில் வானதி சீனிவாசன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இது தொடர்பாக அண்ணாலை 60 மாவட்ட தலைவர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: குறைந்த பட்சம் 5 ஆயிரம் பேரை திரட்டி போராட்டத்தை நடத்த வேண்டும். தி.மு.க.வின் இரட்டை வேட அரசியல், மின் கட்டண உயர்வு போன்ற மக்களை பாதிக்கும் திட்டங்களை மக்கள் மத்தியில் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டு உள்ளார்.