பால்வளத்துறை அமைச்சர் நாசர் பதவி விலக வேண்டும் - அண்ணாமலை வலியுறுத்தல்

 
Annamalai

ஆவின் பாலில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ள நிலையில், இனிமேலும் பால்வளத்துறை அமைச்சர் அந்த பதவியில் நீடிப்பது அழகல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். 

தமிழக பாஜக சார்பில் சென்னை ஆவடியில் 75 வது சுதந்திர தின விழிப்புணர்வு பாத யாத்திரை நடந்தது.திருவள்ளூர் மேற்கு மாவட்ட தலைவர் அஸ்வின் தலைமையில் நடைபெற்ற பாதயாத்திரையில், சிறப்பு அழைப்பாளராக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.பின், செய்தியாளர்களிடம், அண்ணாமலை கூறியதாவது:தேசிய கொடி ஏந்தி மக்கள் எழுச்சியுடன் இந்த பேரணி நடந்துள்ளது. தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களிடையே, தேசப்பற்று குறித்த போட்டிகள் பா.ஜ.க சார்பில் நடத்தப்பட உள்ளது.தமிழகத்தில், பொதுமக்களும், தி.மு.க.,வினரும் வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற அழைப்பை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட வேண்டும்.

annamalai

தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் பாலிலும், பால் கவரிலும் ஊழல் நடந்துள்ளதாக நான் மட்டும் சொல்லவில்லை  ஆவினில் பணியாற்றுகின்ற அனைத்து தொழிற்சங்கத்தினரும் கூறுகின்றனர். ஆவின் பால் பாக்கெட் வாங்கி, எடை போட்டு பார்த்தால், 500 மில்லி இருக்க வேண்டிய எடையில் 430 மில்லி தான் இருக்கிறது. இது ஊரறிந்த உண்மை. பால்வளத்துறை அமைச்சர் நாசர் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும் பல ஊழல் குற்றச்சாட்டுகள் அவர் மீது இருக்கும் சூழலில், அந்த பதவியில் நீடிப்பது அழகா என்பதை அவர் தான் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.