1ம் முதல் 10ம் வகுப்பு வரை ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறப்பு - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு

 
Anbil Magesh

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருக்கிறார்.  

தமிழகத்தில்  10 ,11 ,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இம்மாதம் 31 ஆம் தேதியுடன் அனைவருக்கும் தேர்வுகள்  நிறைவடைகின்றன.  இதனிடையே அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு  ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு, கடந்த மே 13ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.  முதலில் இவர்களுக்கு  ஜூன் இரண்டாவது வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என  கூறப்பட்டிருந்தது.

School Education

பின்னர்  10, 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும்பணி , ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் ஆகியவை காரணமாக ஜூன் மாதம்  கடைசி வாரத்தில் தான் பள்ளிகளை திறக்க  பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக  செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து இன்று காலை 10 மணிக்கு ,  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று  தெரிவிக்கப்பட்டிருந்தது.

school opening

அதன்படி செய்தியாளார்கள் சந்திப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவித்திருக்கிறார். அதில்,  தமிழ்நாட்டில் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 13 தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதேபோல்  11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 27ம் தேதி வகுப்புகள்  தொடங்கும் என்றும்,  12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 20ம் தேதி  பள்ளிகள் திறக்கப்படும் என்றும்  தெரிவித்துள்ளார்.