ஏப்.16ம் தேதி பாமக தொடர் முழக்க போராட்டம் அறிவிப்பு!!
மத்திய அரசை கண்டித்து பாமக தொடர் முழக்கப் போராட்டத்தை அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டிற்கான ரயில்வே திட்டங்களைப் பொறுத்தவரை 2014-ஆம் ஆண்டு முதல் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப் பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தொடர்வண்டி கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வதற்காக 2009-14 ஆண்டு காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக ரூ.879 கோடி மட்டும் தான் ஒதுக்கப்பட்டது. இது 2014-19 காலத்தில் ஆண்டுக்கு ரூ.1979 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது 125% அதிகம் ஆகும். 2014-21 காலத்தில் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு சராசரியாக 142.29 கி.மீ மொத்தம் 996 கி.மீ நீளமுள்ள தொடர்வண்டிப் பாதை பணிகள் நிறைவேற்றி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. தருமபுரி- மொரப்பூர் இடையே புதிய பாதை அமைக்கும் திட்டம் நிலம் கையகப்படுத்துதல் பணியால் தாமதம் ஆவதாகவும், அத்திட்டம் கண்டிப்பாக செயல்படுத்தி முடிக்கப்படும் என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் கிடப்பில் உள்ள ரயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த கோரி வரும் 16ஆம் தேதி சனிக்கிழமை பாமக போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தர்மபுரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு மற்றும் ரயில்வே அலுவலகங்கள் முன்பு தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


