காவிரி சிக்கலில் தமிழர்கள் மீது தாக்குதல் : கர்நாடகத்தை மிரள வைத்த பாட்டாளிகள் படை!

 
ramadoss

தமிழர்கள் மீதான தாக்குதலைக் கட்டுப்படுத்தி கர்நாடகத்தில் அமைதி திரும்பியது என்று ராமதாஸ் நினைவு கூர்ந்துள்ளார்.

pmk
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "காவிரி பிரச்சினையில் தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து துரோகம் இழைக்கப்பட்டு வந்தது. காவிரி நீர்ப்பகிர்வு குறித்த இடைக்கால தீர்ப்பை 1991ஆம் ஆண்டு காவிரி நடுவர்மன்றம் வெளியிட்டது. அத்தீர்ப்பு 10.12.1991 அன்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதுமே கர்நாடகத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் அந்தப் பதற்றம் வன்முறையாக மாறியது. கர்நாடக தலைநகர் பெங்களூரில் தொடங்கி, மாநிலத்தின் உட்பகுதிகள் வரை தமிழர்களை கர்நாடக தீவிரவாத அமைப்புகள் குறிவைத்து தாக்கினார்கள். தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. 

கர்நாடகத்தில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்த நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு  நான்  வேண்டுகோள் விடுத்தேன். ஆனால் அதை ஏற்காத அரசு, ஈரோடு மாவட்டம் கோபி பகுதியில் கர்நாடக அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய அப்பாவி மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 5 பேரை சுட்டுக் கொன்றது. அதன்பிறகு, போராட்டம் தீவிரமடைந்தது.  

tn

அதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையிலும், கர்நாடகத்தில் தமிழர்களை தாக்கும் கன்னடர்களை நேருக்கு நேர் சந்தித்து ஒரு கைப் பார்த்துவிடலாம் என்ற நோக்கத்துடனும், 05.01.1992 அன்று கிருஷ்ணகிரியிலிருந்து கர்நாடகத்திற்கு 1000 வாகனங்களில் அணிவகுத்துச் சென்று “தமிழர் மானம் காப்புப் பேரணி” நடத்தப்படும் என்று நான்  அறிவித்தேன்.வழக்கம்போலவே இந்தப் பேரணியை முறியடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பா.ம.க. தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனால், அதையும் மீறி நூற்றுக்கணக்கான வாகனங்களில் பாட்டாளி மக்கள் கட்சியினர் கிருஷ்ணகிரிக்கு திரண்டு வந்திருந்தனர். அங்கிருந்து கர்நாடகம் நோக்கி பேரணி தொடங்கிய சிறிது நேரத்தில் காவல்துறையினர் என்னையும், பா.ம.க. தொண்டர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  நானும் பாட்டாளிகளும் 15 நாட்கள் சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம்.

tn

பா.ம.க.வினர் மீது திட்டமிட்டு பொய் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தமிழர்களின் மானம் காக்க போராட்டம் நடத்த முன்வந்த அவர்கள் மீது கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் பதிவு செய்யப்பட்டது, அத்துமீறலின் உச்சம் என்று அனைவராலும் கண்டிக்கப்பட்டது. பாட்டாளி மக்கள் கட்சியின் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல் படிப்படியாக குறைந்தது.  கர்நாடகத்தில் வாழும் தமிழர்களை தாக்கினால் அவர்களுக்கு ஆதரவாக யாரும் வரமாட்டார்கள் என்று கர்நாடக அரசு கருதியது. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் எனது  தலைமையில் கர்நாடகத்திற்கு அணிவகுத்துச் செல்ல தயாரானதும், கர்நாடக அரசு அதிர்ந்து போனது. அதன் பயனாகவே தமிழர்கள் மீதான தாக்குதலைக் கட்டுப்படுத்தியது. அதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் அமைதி திரும்பியது" என்று குறிப்பிட்டுள்ளார்.