ஹிஜாபை அகற்றச் சொன்ன பாஜக பூத் ஏஜெண்ட் :பதற்றம் - வாக்குப்பதிவு நிறுத்தம்

 
mb

ஹிஜாப் விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பூதாகரமாக வெடித்திருக்கும் நிலையில் ஆந்திர மாநிலத்திலும் இந்த விவகாரம்  ஆரம்பித்திருக்கிறது.  ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டதால் மாணவிகள் தங்களுக்கு பாடமும் தேர்வும் முக்கியமில்லை ஹிஜாப் தான் முக்கியம் என்று சொல்லி பள்ளி , கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து வருகின்றனர் .

ஹிஜாப் விவகாரம் கர்நாடகா,  ஆந்திரா மட்டுமல்லாது இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் எதிரொலித்து வருகிறது.   குறிப்பாக தமிழ்நாட்டில் ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது.

bm

 இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவிலும் ஹிஜாப் விவகாரம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலையில் 7 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.

 மதுரை மாவட்டத்தில் மேலூர் நகராட்சி 8வது வார்டில் அல்-அமீன் பள்ளியில் அமைந்திருக்கும் வாக்குச்சாவடியில் இஸ்லாமியப் பெண்கள் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்திருக்கிறார்கள்.   அப்போது அப்பெண்கள் அணிந்திருந்த ஹிஜாபை பாஜக பூத் ஏஜென்ட் கிரிராஜன் என்பவர் அகற்றச் சொல்லியிருக்கிறார்.  
அப்பெண்கள் அகற்ற முடியாது என்று சொல்ல,    கிரிராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.  இதனால் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.  இதையடுத்து வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டிருக்கிறது.  

இந்த விவகாரத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சி ஏஜெண்டுகள் மற்றும் அதிகாரிகள் வாக்கு பதிவு மையத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளனர். சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக பூத் ஏஜென்ட் கிரிராஜனை வாக்குப்பதிவு மையத்திலிருந்து பாதுகாப்பு போலீசார் வெளியேறிய பின்னரே வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியிருக்கிறது.

 இந்த சம்பவத்தையடுத்து அல் அமீன் பள்ளியில் அமைந்திருக்கும் வாக்குச்சாவடியில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.