வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு..

 
bank

பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, வங்கி ஊழியர்வேலை நிறுத்தம் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.   ஜனவரி 30 மற்றும் 31ம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருந்த நிலையில் ஒத்திவைப்பு.  

வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலை, ஓய்வூதியத்தை உயர்த்துவது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத்தை மீண்டும் அமல்படுத்துவது, காலி பணியிடங்களை நிரப்புவது போன்ற நிலுவையில் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வங்கி ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்குவது உள்ளிட்ட இந்த  6 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் கடந்த 12ம் தேதி, மும்பையில் இந்திய வங்கிகள் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

bank

இதில் உடன்பாடு ஏற்படாததால் வரும் ஜன. 30, 31-ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாச்சலம்  அறிவித்திருந்தார்.  அதன்படி வேலைநிறுத்தம் காரணமாக  இந்த மாதம்  ஜன 30 ( திங்கள்), 31( செவ்வாய் கிழமை) ஆகிய தேதிகளில் வங்கிகள் செயல்படாது. முன்னதாக  4வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், அடுத்த 2 நாட்கள் வேலை நிறுத்தம் என்பதாலும்  தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்று கூறப்பட்டிருந்தது.

இதனால் பயனர்கள் முன்கூட்டியே தங்களது வங்கிப்பணிகளை திட்டமிட்டுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.  இந்நிலையில், மும்பையில் நேற்று (ஜன-27) மீண்டும்  சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில், கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, வேலைநிறுத்த போராட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது. எனினும், 31-ம் தேதி பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.