வங்கிகள் வேலை நிறுத்தம்; தொடர் விடுமுறை...வாடிக்கையாளர்களே உஷார்!!

 
bank

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து இன்று வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

12 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி ஐஎன்டியுசி., சிஐடியு, ஏஐடியுசி, ஏஐசிசிடியு, எச்எம்எஸ் உள்ளிட்ட 10 மத்திய தொழிற்சங்கங்கள் போராட்டத்தை அறிவித்த நிலையில் இந்த போராட்டத்தில் பொதுத்துறை நிறுவனங்களான வங்கி எல்ஐசி உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் பங்கேற்றுள்ளனர். இதன் மூலம் மத்திய , மாநில அரசு ஊழியர்கள் தொழிலாளர்கள் , அமைப்பு சாரா நிறுவன ஊழியர்கள் என சுமார் 25 கோடி பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 

bank

இந்த சூழலில் இன்றும், நாளையும் பொது வேலை நிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள் பங்கேற்று வரும் நிலையில் வருகிற 30 மற்றும் 31 ஆம் தேதி  வங்கிகள் வழக்கம்போல செயல்படும் . ஆனால் ஏப்ரல் ஒன்றாம் தேதி வருடாந்திர கணக்கு முடிப்பதால் வங்கி செயல்பட்டாலும் வாடிக்கையாளர்கள் சேவை  இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதைத் தொடர்ந்து ஏப்ரல் 2ஆம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பான உகாதி திருநாள் , ஏப்ரல் 3ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்று வங்கிகளுக்கு வழக்கம்போல் விடுமுறை நாளாகும்.

bank

இதன் காரணமாக இன்று முதல் வருகிற ஏப்ரல் 3ஆம் தேதி வரை வங்கிகள் செயல்படாமல் 4ம் தேதியே வழக்கம்போல் இயங்கும் என்று சொல்லப்படுகிறது . இதனால் வங்கி சேவைகளை முன்கூட்டியே வாடிக்கையாளர்கள் திட்டமிடுவது அவசியம் என்று வங்கி ஊழியர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.  அத்துடன் இணைய வழி சேவைகள் ஆகியவை வழக்கம்போல் இயங்கும் என்றும்,   ஏடிஎம்களில் போதிய பணம் இருப்பு வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதளவு பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.