உதயநிதி அமைச்சரானதால்.. பாலியல் சீண்டல்.. போக்சோவில் கைது இல்லையா?

 
u

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதால் மாணவிகள் மீதான பாலியால் சீண்டல் புகாரில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது .  

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு விடுதி . இங்கு தங்கிப் பயிலும் மாணவிகள் சிலரிடம் டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கிறார்.   பாதிக்கப்பட்ட மாணவிகள் மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷிடம் புகார் கொடுத்திருக்கிறார்கள்.   ஆனாலும் தர்மராஜன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

 இதனால் மன உளைச்சளுக்கு ஆளான மாணவிகள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மாவட்ட நீதிபதி ஆகியோருக்கு நவம்பர் மாதம் புகார் கொடுத்திருக்கிறார்கள்.   பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சட்டம் சார் நன்னடத்தை அலுவலர் கோபிநாத் குழந்தைகள் நலக்குழுவினர் டிசம்பர் இரண்டாம் தேதி விடுதிக்கு நேரில் சென்று விசாரித்து வந்துள்ளார்கள்.   அப்போது புகாரியில் உண்மை இருப்பது தெரிய வந்திருக்கிறது.

uu

 இதை அடுத்து டிசம்பர் 7ஆம் தேதி பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு புகார் செய்யப்பட்டிருக்கிறது.   பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜன் மாணவிகள் அளித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க தவறிய மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்தனர். 

 டேக்வாண்டோ பயிற்சியாளர் தர்மராஜன் தற்காலிக பணியாளர் என்பதால் அவரைப் பணி நீக்கமும்,  மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ் சஸ்பெண்ட் செய்தும் சம்பந்தப்பட்ட துறை உத்தரவிட்டு உள்ளது.   ஆனாலும் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து 17 நாட்கள் இருவரும் கைது செய்யப்படாமல் உள்ளார்கள்.  

இருவரையும் கைது செய்ய வலியுறுத்தி மாதர் சங்கம்,  இந்திய மாதர் தேசிய சம்மேளனம் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது.  அப்படியும் இருவரும் கைது செய்யப்படவில்லை.  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார்.  அவர் பொறுப்பேற்ற உடனே விளையாட்டு விடுதி மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்சியாளர் விளையாட்டு அலுவலர் போக்சோ சட்டத்தில் கைது என்ற செய்தி ஊடகங்களில் வெளியானால் பாஜக ,அதிமுக உள்ளிட்டு எதிர்க்கட்சிகள் இதை பெரிதுபடுத்தி அரசியல் ஆக்கி விடுவார்கள்.  அதனால் இந்த பிரச்சனையை கிடப்பில் போட திமுக தலைமை இடம் இருந்து வாய்மொழி உத்தரவு வந்திருக்கிறது.  அதனால் தான் போலீசார் கைது செய்யாமல் உள்ளார்கள் என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.