#Breaking : பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா சிவா அறிவிப்பு..

 
Surya siva

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா சிவா அறிவித்துள்ளார்..

பெண்  நிர்வாகியை ஆபாசமாக பேசி மிரட்டிய விவகாரத்தில் திருச்சி சூர்யா சிவா.  இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார். இந்த  நிலையில் கட்சி பதவியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட திருச்சி சூர்யா ,  பாரதி ஜனதா கட்சியிலிருந்து விலகுவதாக தற்போது அறிவித்திருக்கிறார். மேலும்,  பாஜக மாநில பொதுச் செயலாளர் கேசவ விநாயகத்தை மாற்ற வேண்டும் என்றும் திருச்சி சூர்யா வலியுறுத்தியுள்ளார் ..

 சூர்யா சிவா

இதுதொடர்பாக  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூர்யா சிவா, “அண்ணன் அண்ணாமலைக்கு நன்றி. இதுவரை இந்தக் கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம். நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கத்தை அடையும். அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவவிநாயகம் மாற்றப்பட வேண்டும் . இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும். இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன். உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி” என்று பதிவிட்டுள்ளார்.

சூர்யா சிவா

முன்னதாக, தமிழக பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் டெய்சி மற்றும் ஓபிசி பிரிவு மாநில பொதுச் செயலாளர் திருச்சி சூர்யா சிவா இருவரும் பேசிக்கொண்ட  அலைபேசி உரையாடல் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.  அதில் இருவரும்  கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அப்போது டெய்சி சரணை ஆபாசமான வார்த்தைகளால் திட்டிய சூர்யா சிவா, கொலை மிரட்டலும் விடுத்திருந்தார். இதனையடுத்து  சூர்யா சிவா 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும்,  இந்தச் சம்பவம் தொடர்பாக இருவரிடமும் விசாரணை நடத்தப்படும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். இந்த நிலையில் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்வதாக சூர்யா சிவா அறிவித்திருக்கிறார்.