பி.பி.சி ஆவணப்படம் பார்த்தால் கைது - சிபிஐ(எம்) கண்டனம்!

 
K balakrishnan

பி.பி.சி ஆவணப்படம் பார்த்தால் கைது செய்யப்படும் நிலையில்  அடிப்படை உரிமைகளை மறுப்பதற்கு சட்டத்தில் இடமில்லை என்று சிபிஐ(எம்) கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுக்குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் ஆர்.எஸ்.எஸ்/பாஜகவின் அரசியல் குறித்தும், மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்த பல்வேறு நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியும் பி.பி.சி நிறுவனம், 2 பாகங்கள் கொண்ட ஆவணப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படம் இந்தியாவின் ஜனநாயகத்திற்கு எழுந்துள்ள சவாலை சுட்டிக்காட்டுகிறது. குஜராத் இனப்படுகொலைகளை அன்றைய மோடி தலைமையிலான மாநில அரசு நிர்வாகம் எப்படி கையாண்டது என்பதில் புதிய ஆதாரங்களை வெளிப்படுத்தியுள்ளது.

K balakrishnan

இந்திய ஊடகங்களால் செய்ய முடியாத தரமான புலனாய்வினை மேற்கொண்டு, பாதிக்கப்பட்ட மக்களையும், பாஜகவின் தரப்பையும் பேட்டியெடுத்து அதனை பார்வையாளர்கள் முன் அப்படியே வைத்திருக்கிறார்கள். ஒன்றிய அரசாங்கம் இந்த ஆவணப்படத்தின் மீது அச்சம் கொண்டு, இணைய வெளியில் இருந்தே அகற்றி வருகிறது. அதற்காக ஐ.டி. சட்டத்தின் பிரிவுகள் (அவசர கால) தவறாக பயன்படுத்தியுள்ளனர். ஆனால், இந்த நடவடிக்கை தவறானது, சட்ட விரோதம் என்பதை ஏற்கனவே எதிர்க் கட்சிகளும் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த நிலையில், இணையத்தில் பார்க்க முடியாத ஆவணப்படத்தை ஆங்காங்கே பொதுமக்களும், ஜனநாயக அமைப்புகளும் திரையிடல் செய்து பார்த்து வருகிறார்கள். சென்னையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆவணப்பட திரையிடல் செய்வதை காவல்துறை தடுத்ததுடன், செல்போனில் படம் பார்த்ததற்காக அவர்களை கைது செய்துள்ளது. சென்னை பல்கலை கழகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் ஆவணப்படம் பார்ப்பதை பல்கலை கழக நிர்வாகம் தடுத்துள்ளது. இந்த நடவடிக்கைகள் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாதவை.

K Balakrishnan - கே.பாலகிருஷ்ணன்

ஆவணப்படத்தை பார்த்து செய்தியை தெரிந்துகொண்டு அதன் மீது முடிவு மேற்கொள்வது இந்திய குடிமக்களுக்கு உள்ள அடிப்படையான உரிமை ஆகும். ஆனால் அடிப்படை உரிமைக்கே விரோதமாக காவல்துறையும், கல்வி நிறுவனங்களும் செயல்பட்டுள்ளன. சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு இந்த நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாடு முழுவதும் வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் இடதுசாரி, ஜனநாயக அமைப்புகள் முன்னின்று ஆவணப்பட திரையிடலையும், அதன் மீதான உரையாடலையும் முன்னெடுக்கவுள்ளோம். பொதுமக்களின் பார்வையில் இருந்து உண்மைகளை மறைப்பது மென்மேலும் பிற்போக்கான சூழலுக்கே நாட்டை இட்டுச் செல்லும் என்பதை உணர்ந்து, தமிழ்நாடு அரசும், காவல்துறையும்மக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாத்திட வேண்டும் என அழுத்தமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.