போதை பொருள் விற்பவர்களின் சொத்துக்களை முடக்குங்கள் - முதலமைச்சர் அதிரடி

 
stalin

தமிழகத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கைது செய்து அவர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

தமிழகத்தில் போதை பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது.  இதனால் இளைஞர்கள் பெருமளவில் சீரழிந்து வருகின்றனர். இதனையடுத்து போதைப் பொருட்களை ஒழிக்க ஒத்துழைப்பு தருமாறு கடந்த 5ஆம் தேதி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதேபோல் ஒவ்வொறு ஆண்டும் ஆகஸ்ட் 11ம் தேதி போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நாளாக கடைபிடிக்கப்படும் எனவும் அறிவித்திருந்தார். இந்நிலையில் நாளை போதைப்பொருள் விழிப்புணர்வு நாள் கடைபிடிக்கப்படவுள்ளதையொட்டி, போதைப் பொருட்களின் பயன்பாட்டை ஒழிப்பது தொடர்பாக  மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளர்கள் உடனா சிறப்பு ஆய்வுக்கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்   சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது. இதில், தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட கண்காணிப்பாளர் கலந்து கொண்டனர்.

stalin

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:தமிழகத்தில் நாளுக்கு நாள் போதை பொருள் பயன்படுத்துவோர் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. போதை மருந்துகள் நம் மாநிலத்திற்குள் வருவதை நாம் தடுக்க வேண்டும்.போதை என்பது அதை பயன்படுத்தும் தனிநபர் பிரச்னை இல்லை, சமூகப் பிரச்னை. தமிழகத்தில் போதைப் பொருள்கள் நுழைவதை முழு ஆற்றலை பயன்படுத்த வேண்டும்.போதைப் பொருள்கள் தான் மத, சாதி மோதல்களை தூண்டுதலாக அமைந்துவிடுகிறது. போதைப் பொருள்கள் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை குற்றங்கள் நடக்க காரணமாக இருக்கிறது.
போதையின் பாதையில் செல்லும் ஒவ்வொருவரையும் தடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

போதைப் பொருள் விற்பவர்களை கைது செய்து அவர்களின் சொத்துகளை முடக்க வேண்டும்.தங்கள் குழந்தைகள் போதைப் பொருள்கள் பயன்படுத்துகிறார்களா என்று பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் அருகே போதைப் பொருள் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும்.எல்லாவற்றிலும் வளரும் தமிழ்நாடு, போதைப் பொருள் போன்ற எதிர்மறை விஷயங்களிலும் வளர்ந்து விடக் கூடாது. போதை என்பது தனி மனித பிரச்சினை அல்ல, சமூக பிரச்சினை. போதைப்பழக்கம் என்பது சமூக தீமை அதை ஒழிக்க பாடுபட வேண்டும். போதை பொருள் நடமாட்டத்தில் குஜராத், மகாராஷ்ட்ராவை விட தமிழ்நாடு குறைவுதான் என நான் சமாதானம் அடைய தயாராக இல்லை. இவ்வாறு தெரிவித்தார்.