தமிழகம் நம்பர் 1 மாநிலம் என எப்போது வருகிறதோ அன்று தான் பெருமை - முதலமைச்சர் பேச்சு

 
MK Stalin

நம்பர் 1 முதலமைச்சர் என்பதில் பெரிய பெருமையோ, பாராட்டோ பார்க்கவில்லை எனவும், என்றைக்கு தமிழகம் நம்பர் 1 மாநிலம் என வருகிறதோ அன்று தான் பெருமை என முதலைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 

சென்னையில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விழாவில் பேசியதாவது:- இந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சியாக நடந்து கொண்டிருப்பதை பார்த்து வருகிறீர்கள். புயலுக்கு அரசு எடுத்த நடவடிக்கையை மக்கள் பாராட்டி வருகின்றனர். ஆட்சிக்கு வந்த போது கொரோனா தாக்கம் இருந்தது. அதில் இருந்து மீண்டோம். அன்றைக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் மட்டும் சுகாதாரத்துறை அமைச்சர் அல்ல. முதல்-அமைச்சர் முதல் அனைத்து அமைச்சர்களும் சுகாதார அமைச்சராக மாறினோம். அதனால், கோவிட்டை கட்டுப்படுத்த முடிந்தது. இது முடிவதற்கு முன்பே வெள்ளம், பெரிய மழை வந்தது. அதனை சமாளித்து வெற்றி கொண்டோம். தற்போது புயல் வந்தது. புயலையே சந்திக்கும் ஆற்றல் இந்த திராவிட மாடல் ஆட்சிக்கு உள்ளது.  

நேற்று முதல் மொபைலை கீழே வைக்க முடியவில்லை. சிறப்பாக செயல்பட்டதாக அனைவரும் பாராட்டுகின்றனர். சமூக வலைதளங்களிலும் பாராட்டு வருகிறது. நம்பர் 1 முதல்-அமைச்சர் என்பதில் பெரிய பெருமையோ, பாராட்டாகவோ பார்க்கவில்லை. என்றைக்கு தமிழகம் நம்பர் 1 மாநிலம் என வருகிறதோ அன்று தான் பெருமை. அதனை நிச்சயம் நிறைவேற்றுவேன். ஏனென்றால், நான் சாதாரண ஸ்டாலின் அல்ல. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். நிச்சயம் அதனை நிறைவேற்றுவேன்.  இவ்வாறு கூறினார்.