நாகையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
cm nagai

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி கருவேலங்கடை கல்லாறு வாய்க்கால் தூர்வாரப்பட்ட பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். 

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக ஆண்டுதோறும் சிறப்பு தூர்வாரும் பணி நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் சிறப்பு தூர்வாரும் பணிக்கு ரூ.80 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி மூலம் 4 ஆயிரத்து 965 கிலோ மீட்டர் நீளத்துக்கு பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு நேற்று  திருச்சிக்கு வந்தார். பின்னர் அங்கிருந்து காரில் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே வடபாதி கொக்கேரி கிராமத்திலுள்ள வாய்க்கால் தூர்வாரும் பணியை ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் 3 கோடியே 46 லட்சம் மதிப்பிலான தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக  நேற்று  இரவு வேளாங்கண்ணி வந்தார். தொடர்ந்து அங்குள்ள தனியார் ஹோட்டலில் இரவு தங்கினார்.

cm nagai

தொடர்ந்து இன்று காலை 9.10 மணி அளவில் வேளாங்கண்ணி அடுத்த  கருவேலங்கடை கல்லாறு வாய்க்கால் தூர்வாரப்பட்ட பணியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து அந்தபகுதியில் வைக்கப்பட்ட சிறப்பு தூர்வாரும் பணிகள் குறித்த புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டார். தொடர்ந்து வேளாண் துறை சார்பில் குறுவை சாகுபடிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விதைநெல், பூச்சிக்கொல்லி மருந்து, நாற்றங்கால் உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்த அரங்கை பார்வையிட்டார். இதை தொடர்ந்து வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் தரமாக நடைபெற்று உள்ளதா? எனவும், திருப்தியாக இருக்கிறதா? எனவும் அங்கு நின்ற விவசாயிகளிடம் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக புறப்பட்டு சென்றார்.