உயிரிழந்த இந்து ஆங்கில நாளிதழ் புகைப்பட கலைஞர் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்!!

 
stalin stalin

உயிரிழந்த இந்து ஆங்கில நாளிதழ் புகைப்பட கலைஞர் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

tn

தி இந்து ஆங்கில நாளிதழில் மூத்த புகைப்பட கலைஞராக பணியாற்றி வந்த கே.வி. சீனிவாசன் இன்று காலை சென்னை பார்த்தசாரதி கோயிலில் வைகுண்ட ஏகாதசி நிகழ்வை புகைப்படம் எடுக்க சென்றுள்ளார். புகைப்படம் எடுக்கும் பணிகளை மேற்கொண்டிருந்த போது சீனிவாசனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.  இதனால் கோயில் வளாகத்திலேயே அவர் மயங்கி விழுந்துள்ளார்.  இதையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு நிலையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த புகைப்பட கலைஞர் கே.வி. சீனிவாசன் மறைவுக்கு பலரும் இரங்கல்  தெரிவித்து வருகின்றனர்

இந்நிலையில்  முதல்வர் ஸ்டாலின்  வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் , "தி இந்து (The Hindu) ஆங்கில நாளிதழில் மூத்த புகைப்படக் கலைஞராக பணியாற்றி வந்த திரு. கே. வி. சீனிவாசன் அவர்கள் (வயது 56), இன்று (02.01.2023) அதிகாலை 04.30 மணியளவில் சென்னை, திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி திருக்கோயிலில் நடைபெற்ற வைகுண்ட ஏகாதசி வைபவ நிகழ்ச்சியை புகைப்படம் எடுத்து வெளியிடுவதற்கான பணியிலிருந்த போது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்பதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன்.

stalin

திரு.கே.வி. சீனிவாசன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், ஊடகத் துறை நண்பர்களுக்கும் இத்துயர்மிகு நேரத்தில் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், தமிழ்நாடு அரசின் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதித் திட்டத்தின் கீழ் உயிரிழந்த
திரு.கே.வி. சீனிவாசன் குடும்பத்தாருக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.