ஊராட்சி நிதியை பயன்படுத்தாவிட்டால் அபராத வட்டி - மத்திய அமைச்சர்

 
kapil moreshwar patil

ஊராட்சிக்கு ஒதுக்கப்படும் நிதியை 10 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட திட்டத்திற்கு பயன்படுத்தவில்லை என்றால் அபராத வட்டி விதிக்கப்பட்டுட்ம் என மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் கபில் மோரேஷ்வர் பாட்டீல் தெரிவித்துள்ளார். 

ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதியின் மூலம் ஊராட்சி திட்டங்கள் எந்த அளவிற்கு செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் கபில் மோரேஷ்வர் பாட்டீல் ராமநாதபுரத்திற்கு வருகை தந்தார். இதனையடுத்து அவர் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து அதிகாரிகள் மற்றும் பயனாளிகளிடம் கேட்டறிந்தார். 

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில், மத்திய அரசின் திட்டங்கள் எந்த அளவிற்கு செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்து அதிகாரிகள், பயனாளிகளிடம் கேட்டறிந்தோம். ஒவ்வொரு நிதி ஆண்டும், பஞ்சாயத்துராஜ் துறைக்கு பல லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. அவற்றை பெறுவதற்குரிய தணிக்கை ஆவணங்களை, மாநில அரசுகள் சமர்ப்பிக்காமல் உள்ளதால் தாமதம் ஏற்படுகிறது. இந்த பிரச்னை ராமநாதபுரத்திலும் உள்ளது. இதுதொடர்பாக கூடுதல் ஆட்சியரிடம் விசாரித்து, விரைவில் ஆவணங்களை சமர்பிக்க கூறியுள்ளேன். ஊராட்சிகளுக்குரிய நிதி ஒதுக்கிய, 10 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட திட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், மாநில நிதியில் அபராத வட்டி செலுத்தி, அதையும் ஊராட்சிக்கு பயன்படுத்த வேண்டும். மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு இவ்வாறு அபராதம் விதித்துள்ளோம். தமிழகத்தில் இதுவரை இல்லை. இவ்வாறு தெரிவித்தார்.