ஆர்.எஸ்.எஸ். பற்றி திருமாவளவனுக்கு என்ன தெரியும்? - எல்.முருகன் காட்டம்

 
l

தேசிய கொடி பற்றி ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கு, திருமாவளவன் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், ஆர்.எஸ்.எஸ். பற்றி திருமாவளவனுக்கு என்ன தெரியும்? எனவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். 

சென்னை வடபழநியில் பாஜக பிற மொழிகள் பிரிவு நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன் கூறியதாவது: மின் கட்டண உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து, பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தி வரும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது, காவல் துறையில் புகார் கொடுத்து, நடவடிக்கை எடுக்கப் போவதாக, மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியிருக்கிறார்.  கேள்வி கேட்கும் எதிர்க்கட்சியினரை, காவல் துறையை வைத்து முடக்கும் செயலாகவே பார்க்கிறேன். காவல்துறையை வைத்து எதிர்க்கட்சியினரை மிரட்டும் மாநில அரசுகள் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரணையை ஏன் பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கின்றனர்.  , மடியில் கனமில்லை என்றால், அமலாக்கத் துறை, சி.பி.ஐ., வருமான வரித் துறையை பார்த்து, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஏன் பயப்பட வேண்டும்? தவறு செய்யவில்லை என்றால், யாரும் பயப்படத் தேவையில்லை.

L.Murugan

தொடர்ந்து பேசிய அவர், ஆர்.எஸ்.எஸ்., அலுவலகங்களில், தேசியக் கொடியேற்றுவரா என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியிருக்கிறார். ஆண்டுதோறும் ஆர்.எஸ்.எஸ். சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது. 75-வது சுதந்திர தினத்தையொட்டி, நாட்டு மக்களுக்கு தேசியக் கொடிகளை, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு வழங்கி வருகிறது. தேசியக் கொடி பற்றி ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்திற்கு, திருமாவளவன் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.